காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க., கட்சி தலைவர் விஜயகாந்த் இணைவார் : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கை

மதுரை : காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க., கட்சி தலைவர் விஜயகாந்த் இணைவார் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் என நம்புகிறேன். இதற்காக நல்லெண்ண அடிப்படையில் விஜயகாந்து‌‌டன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேச நலனில் அக்கறை கொண்ட விஜயகாந்த் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.,வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும், எந்தெந்த தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என்பது குறித்தும் காங்., தலைவர் சோனியாவும்- முதல்வர் கருணாநிதியும் பேசி முடிவெடுப்பார்கள். விடுதலை சிறுத்தைகள் காங்., கூட்டணியில் நீடிப்பது குறித்து தங்கபாலுவின் நிலைப்பாடே என்னுடையதும். ஆனால் ‌கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் கட்டுப்படுவார்கள். பா.ம.க., வை பொறுத்த வரை மத்திய அமைச்சரவையில் அன்புமணி இடம் பெற்றுள்ளதால் தொடர்ந்து பா.ம.க.,வின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும், லோக்சபா தேர்தலுக்கு கூட்டணியில் விஜயகாந்த் இணைய விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்த கேள்விக்கு முதல்வர் கருணாநியிடம் கேட்டதற்கு , நல்ல செய்தி‌ எங்கிருந்து வந்தாலும் வரவேற்போம் என தெரிவித்துள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.