சென்னை துறைமுக கண்டெய்னர் டெர்மினல்-9 நிறுவனங்கள் போட்டி

சென்னை: சென்னை துறைமுகத்தின் புதிய கண்டய்னர் டெர்மினல் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள 9 நிறுவனங்கள் போட்டிபோடுகின்றன.

ரூ. 3,686 கோடி மதிப்பில், சென்னை துறைமுகத்தின் கண்டெய்னர் கையாளும் பிரிவை அமைக்க சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 4 மில்லியன் டன் ஏற்றுமதி சரக்குகளைக் கையாளும் வகையில் அமையவுள்ள இந்த புதிய டெர்மினல் கட்டுமானப் பணிகளுக்கு எல் அண்டு டி டிரான்ஸ்கோ, நவயுகா என்ஜினீயரிங் கம்பனி, டிபி வேர்ல்டு, ஐஎல் அண்டு எப்எஸ் மரிடைம் இன்ப்ரா கம்பெனி, வாடினர் ஆயில் டெர்மினல், முந்த்ரா போர்ட், லங்கோ இன்ப்ரா டெக், எப்ஜிஐ குழுமம் மற்றும் ஜிவிகே போன்ற நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

மத்திய அரசிடமிருந்து பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களும் உறுதி செய்யப்பட்ட பிறகு, ஏலத்தில் பங்கேற்கத் தகுதியுள்ள நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த கண்டெய்னர் டெர்மினல் கட்டுமானப் பணிகளுக்கான தொகையில் ரூ.1600 கோடியை சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் தரும். மீதியை கட்டுமானம் முடித்து குறிப்பிட்ட காலம் வரை இயக்கி பின்னர் துறைமுகப் பொறுப்புக் கழகத்திடம் ஒப்படைத்தல் (BOT) எனும் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது சென்னைத் துறைமுகத்தில் உள்ள பாரதி டெக்கிற்கு வடக்கே இந்த புதிய கண்டெய்னர் டெர்மினல் உருவாக்கப்படும். 4 கிலோ மீட்டர் அகலம் மற்றும் 18 மீட்டர் ஆழம் கொண்டதாக இந்த டெர்மினல் அமைக்கப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia

Leave a Reply

Your email address will not be published.