தம்பதியைக் கட்டிப் போட்டு கத்திமுனையில் ரூ.1 கோடி நகை கொள்ளை

சென்னை: சென்னை திருமங்கலத்தில் வசித்து வரும் ராஜஸ்தான் தம்பதியைக் கட்டிப் போட்டு ரூ. 1 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் அசோக்குமார் மல்பானி வசித்து வருகிறார். இவர் தங்கம், வைர நகை வியாபாரம் செய்து வந்தார். சவுகார்பேட்டையில் அலுமினியம் தகடுகளை வாங்கி விற்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் கிளப் ஒன்றுக்கு சென்ற மல்பானி, பின்னர் குடும்பத்தினருடன் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு தாமதாக வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர்.

இந்நிலையில் மூன்று பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று வீட்டுக்குள் புகுந்து, மல்பானியை தட்டி எழுப்பியது. அவரிடம் லாக்கர் சாவியை தரும்படி கத்தி முனையில் மிரட்டியுள்ளது.

பின்னர் அவரது குடும்பத்தினர் மீது மயக்க மருந்தை தெளித்து அவர்களை கட்டிபோட்டுவிட்டு, நகை மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை எடுத்து கொண்டு தலைமறைவாகியது.

மயங்கி தெளிந்து எழுந்த மல்பானி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரிடம் கொள்ளையடிக்க வந்தவர்கள் ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருந்ததாகவும், அவர்கள் அறைகுறை இந்தியில் பேசியதாகவும் கூறினார்.

கைரேகை நிபுணர், மோப்ப நாய் சகிதம் வீட்டை சோதனை செய்த போலீசார், கொள்ளையர்கள் கதவு எதையும் உடைக்காமல் உள்ளே நுழைந்துள்ளதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த வீட்டில் உள்ள பீகாரை சேர்ந்த வேலைக்காரர் துப்பு கொடுத்திருக்கலாம் என்றும், வந்தவர்களுக்கு அவரே கதவை திறந்துவிட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தில் உள்ளனர். இதையடுத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Source     &    Thanks  :   dinamalar

Leave a Reply

Your email address will not be published.