நயாகராவில் குதித்தவர் காயமின்றி தப்பினார்

டொரான்டோ : உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சியான நயாகராவில் குதித்தவர் காயமின்றி உயிர் பிழைத்துள்ளார். அமெரிக்காவையும், கனடாநாட்டையும் இணைக்கும் நயாகரா வீழ்ச்சி, 170 அடி உயரத்திலிருந்து நொடிக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் கேலன் தண்ணீரை கொட்டிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டுவதால் நீர்திவலைகள் சூழ்ந்து அந்த பகுதி புகைமூட்டம் போல் காட்சியளிக்கும். இந்த அரிய காட்சியை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். சுற்றுலா பயணி ஒருவர் நயாகரா வீழ்ச்சியில் விழுந்து விட்டதாக நேற்று முன்தினம் கனடா நாட்டு போலீசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். புயல் வேகத்தில் ஓடும் நீரில் அகப்பட்ட அந்த நபர் ஒரு இடத்தில் ஒதுங்கியிருப்பதை கண்ட போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கின்னஸ் சாதனை படைப்பதற்காக, நீர்வீழ்ச்சியில் குதித்ததாக கிர்க் ஜோன்ஸ்(40) என்ற இந்த நபரின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதை அவரது தாய் மறுத்துள்ளார். போதிய பாதுகாப்பின்றி இங்கு குதிக்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஜோன்ஸ் குதித்ததால் அவருக்கு கணிசமான தொகையை போலீசார் அபராதமாக விதித்துள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.