னாதிபதி மஹிந்த ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்படுகிறார்: சிறிதுங்க ஜயசூரிய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஆட்சி நடத்தி வருவதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இலங்கையில் தலையீடு செய்வதனை அடியோடு வெறுத்த ஜனாதிபதி தற்போது இரு கரம் கூப்பி குறித்த அமைப்புக்களை கடன் வழங்குமாறு அழைப்பது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரியாமல் மேற்கொள்ளப்படும் இந்த கொடுக்கல் வாங்கல்களின் ரகசிய நிபந்தனைகள் என்ன என்பதை நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவசர அவசரமாக மின்சார சபை திருத்தச் சட்டமூலம் இந்த நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்த வெற்றிகளை தவிர இந்த அரசாங்கத்தினால் பற்றிபிடிக்க வேறு விடயங்கள் இல்லை. ஆயிரத்து 800 கோடி ரூபாவை செலவிட்டு, 500 பேருக்கும் மேல் இல்லை என கூறும் விடுதலைப்புலிகளுடன் மோதலில் ஈடுபட 50 ஆயிரம் படையினரை ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு பெறும் வெற்றி ஒருபோதும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த காரணமாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வொன்று நாட்டுக்கு அவசியம் என்பதனை கருத்திற் கொண்டு அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.