அரச பணியாளர்களை பலாத்காரமாக சுதந்திரக் கட்சியில் இணைத்த முரளிதரன் குழு

கிழக்கு மாகாணத்தில் இருந்து அரச பணியாளர்கள் பலர் சிறிலங்கா படையினருடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவான முரளிதரன் குழுவினால் பலாத்காரமாக கொழும்புக்கு அழைக்கப்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவம் வழங்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

திருகோணமலை, மூதூர் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இருந்து பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை மீள்குடியேற்றம் தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்கு கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவ்வாறான ஒரு சந்திப்பு தமக்கு தேவையில்லை என அரச அதிகாரிகள் பலரும் ஏற்க மறுத்த போதும் அச்சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அச்சுறுத்தியதனால் கொழும்புக்கு வந்ததாகவும் எனினும் அவ்வாறான சந்திப்புக்கள், பேச்சுக்கள் எதுவும் இன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவ பத்திரத்தை தமக்கு பலாத்காரமாக வழங்கியதாகவும் அரச பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முரளிதரன் இணைந்ததாகவும் 3 ஆயிரம் பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண அரச பணியாளர்கள், பலாத்காரத்தினாலும் அச்சுறுத்தலினாலும் கொழும்புக்கு வந்ததாகவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் அவரின் செயலாளருமான பசில் ராஜபக்ச தம்மை மிரட்டி சிறிலங்கா சுதந்திர கட்சியின் அங்கத்துவத்தை பெறுமாறு வற்புறுத்தியதாகவும் கூறினர்.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் முரளிதரன் குழுவின் அழைப்பை ஏற்று கொழும்புக்கு செல்லாத அரச அதிகாரிகள் சிலர் அக்குழுவினால் மிகவும் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளதுடன், தகாத வார்த்தைகளினால் ஏசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் வேறு சில அரச அதிகாரிகள் மற்றைய ஆயுதக்குழுவான சந்திரகாந்தனிடம் முறையிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.