ஈழத் தமிழருக்காக கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த மாணவன் கைது

ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் கொலை வெறித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரியும், அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் மாணவன் ஒருவர் தமிழ்நாடு அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மணலி முனுசாமி நகரில் வசித்து வரும் சுகுமாரின் மகன் செல்வம் (வயது 26). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த பட்டப் படிப்பு பயின்று வருகிறார்.

சென்னையில் உள்ள அரசு தலைமைப் பொது மருத்துவமனையில் 8 ஆவது மாடியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:30 நிமிடமளவில் செல்வம் ஏறி நின்றார்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பைக் கீழே வீசி எறிந்து விட்டு மாடியில் இருந்து குதிக்க முயற்சித்தார். இதனைப் பார்த்ததும் அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், மருத்துவமனை பாதுகாவலர்களும், காவல்துறையினரும் சேர்ந்து 8 ஆவது மாடிக்கு ஓடிச் சென்று மாணவன் செல்வத்தைக் கீழே குதித்துத் தற்கொலை செய்துவிடாமல் தடுத்தனர்.

இந்நிகழ்வினால், சென்னை பொது மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

காவல்துறையினர் அந்த மாணவனைப் பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக செய்தி அறிந்ததும் காவல்துறை ஆய்வாளர் பரந்தாமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினார்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி மாணவன் செல்வம் எழுதி வைத்திருந்த குறிப்பினை ஆய்வாளர் பரந்தாமன் வாங்கிக் கொண்டு அதனை எடுத்துச் சென்றுவிட்டார்.

இதனால் அந்தக் குறிப்பில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவரத்தை ஊடகவியலாளர்களால் தெரிந்து கொள்ள இயலவில்லை.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி தற்கொலை செய்ய முயற்சித்த மாணவன் செல்வம் கூறுகையில்,

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே நான் தற்கொலை செய்ய முயன்றேன். சிறிலங்கா தூதரகம் வரை முட்டிப் போட்டுக் ண்டு நடந்து சென்று மனு கொடுக்க அனுமதி கேட்டேன். ஆனால் காவல்துறையினர் மறுத்துவிட்டனர். பின்னர் கண்ணாடி துண்டுகள் மீது நடந்து சென்று ஜப்பான் தூதரகத்தில் மனு கொடுக்க அனுமதி கேட்டபோதும், காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

அமெரிக்கத் தூதரகம் வரை முட்களின் மீது நடந்து சென்று மனு அளிக்க நினைத்தேன் அதற்கும் அனுமதியளிக்கவில்லை. இவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசின் கவனத்தை ஈர்க்க நான் முயற்சித்த போதெல்லாம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனால்
மருத்துவமனையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன் என்று கூறினார்.

மாணவன் செல்வம் தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து அரசு தலைமைப் பொது மருத்துவமனை பாதுகாவலர் பாலகிருஸ்ணன் (வயது 53) அளித்த முறையீட்டின் பேரில் பொது மருத்துவமனை வளாகக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.