மன்னாரில் சிறிலங்கா படையினரும் ஆயுதக் குழுவும் பாலியல் வல்லுறவு முயற்சி: பெண்களின் துணிச்சலால் தப்பியோட்டம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள பேசாலையில் சிறிலங்கா படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் பலாத்காரமாக வீட்டுக்குள் புகுந்து பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முற்பட்டபோது அயலவர்கள் ஒன்று திரண்டு தடி தண்டுகளுடன் சென்றமையினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதக் குழுவும் வெகுண்டெழுந்து ஓட்டம் பிடித்தனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1:30 நிமிடத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தில் பெண்கள் துணிச்சலுடன் செயற்பட்டமையினால் தமது முகங்களை முகமூடிகள் மூலம் மறைத்துக்கொண்டு வந்த படையினரும் ஆயுதக் குழுவும் செய்வதறியாது வீட்டின் பின் சுவரினால் ஏறி தப்பி ஓடியதாக சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் கூறுகின்றனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் மேலும் விபரிக்கையில்,

மன்னார் பேசாலையில் உள்ள வீடொன்றில் உறக்கத்தில் இருந்த வேளை அங்கு சென்ற ஆயுததாரிகள் சிலர் வீட்டை சோதனையிட வேண்டும் எனக்கூறி கதவை திறக்குமாறு சத்தமிட்டனர்.

வீட்டார் கதவை திறக்காததால் தொடர்ந்தும் ஆயுததாரிகள் சத்தமிட்டு மிரட்டவே வீட்டில் உள்ளவர்கள் அபயக்குரல் எழுப்பினர். இதனால் அயலவர்கள் ஒன்றுதிரண்டு குறித்த வீடு நோக்கி சென்றபோது அதிர்ச்சி அடைந்த ஆயுததாரிகள், தமது ஆயுதங்களைக் காட்டி அவர்களையும் மிரட்டினர்.

குறித்த வீட்டில் தாய், தந்தை மற்றும் இரு பெண் பிள்ளைகள், இரு மகன்மாரும் வீட்டில் இருந்துள்ளனர். உதவிக்குச் சென்ற அயலவர்களை மிரட்டி அனுப்பிய ஆயுததாரிகள், பின்னர் மீண்டும் குறித்த வீட்டாரை எச்சரிக்கை செய்து கதவைத் திறக்குமாறு சத்தமிட்டனர்.

அதிகாலை 4:00 மணியளவில் வீட்டார் கதவை திறக்கும்போது வெளியே நின்ற ஆயுததாரிகள் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அங்கிருந்த ஆண்களை அறை ஒன்றுக்குள் வைத்து பூட்டினர்.

பின்னர் , பெண்களை வேறு ஒரு அறையில் வைத்து பூட்டி பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் அபயக்குரல் எழுப்பவே அயலவர்கள் மீண்டும் ஒன்று திரண்டு தடி தண்டுகளுடன் சத்தமிட்டவாறு குறித்த வீட்டுக்குள் நுழைந்த போது ஆயுததாரிகள் அவர்களுடன் உதவிக்கு வந்த படையினரும் அச்சத்தினால் வெகுண்டெழுந்து பின் சுவரினால் வீட்டை விட்டு வெளியேறி தப்பியோடினர்.

ஆயுததாரிகள் மூவர் அங்கு காணப்பட்டனர். இவர்கள் தங்களின் முகங்களை மூடி மறைத்திருந்தனர். அவர்களில் இருவர் சாரங்களால் போர்த்திருந்தனர். ஒருவர் நீளக்காற்சட்டையும் ரீ சேட்டும் அணிந்திருந்நதார்.

இதேவேளை, சிறிலங்கா படையினரும் ஆயுதக் குழுவினரும் மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான அடாவடித்தனங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் ஆனால் உயிர் அச்சுறுத்தலினால் பலர் தமக்கு ஏற்பட்ட அநீதிகளை வெளியில் கூறுவதற்கு தயங்குகின்றனர் என்று மன்னாரில் உள்ள மதத் தலைவர்களும் உள்ளுர் தொண்டு நிறுவன பிரதிநிதிகளும் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு தயக்கம் காண்பிப்பதனால் சிறிலங்கா படையினரும் ஆயுதக் குழுவினரும் அவ்வாறான பாலியல் வல்லுறவு சேட்டைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்படி சம்பவத்தில் அயலவர்கள் ஒன்று சேர்ந்து ஈடுபட்டது போன்று வேறு சம்பவங்களிலும் செயற்பட வேண்டும் எனவும் அப்போதுதான் ஆயுதக் குழுக்களை விரட்டியடிக்க முடியும் எனவும் மதத் தலைவர்கள் கூறுகின்றனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.