வன்னி-தமிழர்களை மீட்க அமெரிக்க படை?

வாஷிங்டன்: வன்னிப் போர்க் களத்தில் சிக்கியுள்ள 2 லட்சம் தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் முயலக் கூடாது. அப்படி செய்தால் அது தமிழ் மக்கள் மீதான இலங்கையின் போரை ஊக்குவிப்பது போலாகும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த இலங்கையில் உள்ள மக்களுக்கான சமத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான அமைப்பு (பியர்ல்) கூறியுள்ளது.

வன்னி போர்க்களத்தில் மிகக் குறுகிய வனப்பரப்புக்குள் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசும், ராணுவமும், பாதுகாப்பு வளையப் பகுதிகளை அறிவித்தது. ஆனால் அந்தப் பகுதிக்குள் வரும் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்து வருகின்றன இலங்கைப் படைகள்.

இதனால் வனப் பகுதியிலிருந்து வெளியேற தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந் நிலையில் வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படையினரின் உதவியை இலங்கை கோரியுள்ளதாக தெரிகிறது.

இப்படையினர் தமிழர்களை மீட்ட இலங்கை அரசிடம் ஒப்படைப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த முயற்சி்க்கு பியர்ல் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழர்களை மீட்டு இலங்கையிடம் ஒப்படைத்தால் அது அப்பாவித் தமிழர்கள் பெருமளவில் பலியாக வழி ஏற்படுத்தி விடும். மேலும், அப்பாவித் தமிழர்கள் மீதான இலங்கையின் போரை அமெரிக்கா ஆதரிப்பதாகி விடும் எனவும் பியர்ல் அமைப்பு கூறியுள்ளது.

தமிழர்களை மீட்பதற்குப் பதில் பாதுகாப்பு வலையப் பகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு வரும் அப்பாவிகள் பலியாகாமல் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

மேலும், நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அப்பகுதிகளுக்குள் சுதந்திரமாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று அது கோரியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவிலிருந்தபடி செயல்படும் பியர்ல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:

கொழும்பிலிருந்து எங்களுக்குக் கிடைத்துள்ள உறுதியான தகவலின்படி, அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைகள், 2 லட்சம் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிகிறோம்.

இந்த திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், இலங்கையில் நடந்து வரும் இன அழிப்புக்கு ஆதரவாக செயல்படுவது போலாகி விடும்.

தமிழர்களை வெளியேற்றுவதற்குப் பதில், பாதுகாப்பு வலையப் பகுதிகளை பலப்படுத்தலாம் விரிவுபடுத்தலாம். மேலும், அங்கு நிவாரணப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கலாம்.

வன்னி வனப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் மக்கள், இலங்கைப் படையினரின் தாக்குதலில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2000க்கும் மேற்பட்ட தமிழர்களை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளன. 7000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்க பசிபிக் கமாண்ட் திட்டமிட்டிருப்பது அவர்களை முகாம்கள் என்ற பெயரில் சிறையி்ல் அடைக்கவே வழி செய்யும்.

தற்காலிக முகாம்களில் அகதிகளாக தங்கியிருக்கும் தமிழ் மக்களை இலங்கை அரசு மிகக் கொடூரமாகவும், மோசமாகவும் நடத்தி வருவதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள், நிவாரண குழுக்கள் ஏற்கனவே ஆதாரத்துடன் தெளிவுபடுததியுள்ளன.

முகாம்களில் தங்க வைப்பதாக கூறி குடும்பத்தினரிடமிருந்து பிரித்தும், எந்தவித சர்வதேச நிவாரண உதவியும் கிடைக்காமல் செய்தும், சித்திரவதை செய்தும், கற்பழிப்பு, கொலை என்ற பாதகச் செயல்களிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் லட்சக்கணக்கான தமிழர்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மரண சாசனத்தை எழுதிக் கொடுப்பது போலாகி விடும்.

காரணம், அரசுப் பகுதிகளுக்கு இவர்கள் வந்தவுடன் பெரும்பாலானவர்கள் அரசின் கூற்றுப்படி காணாமல் போய் விடுவார்கள்.

உலக அளவில் அரசாங்கமே பெருமளவில் கடத்தல் மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபடுவது இலங்கையில்தான் அதிகம் நடைபெறுகிறது. இதை காணாமல் போவோர் தொடர்பான ஐ.நா. அமைப்பே கூறியுள்ளது.

அப்பாவி மக்கள் மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்கள், நிவாரணப் பணியாளர்களையும் கூட சித்திரவதை செய்வதும், கடத்துவதும் இலங்கை அரசின் செயல்களாக உள்ளன.

வன்னிப் பகுதியில் 70 ஆயிரம் பேர்தான் சிக்கியிருப்பதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் 2 லட்சம் தமிழர்கள் சிக்கியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா, மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இதன் மூலம், பெருமளவிலான தமிழர்களை கொன்று இன அழிப்பை மேற்கொள்ள இலங்கை அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பது புலனாகும்.

மேலும், மீட்டு வரப்படும் தமிழர்கள் இதுவரை விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்பதால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்களைக் கொல்லவும் இலங்கை அரசு முயலும்.

சந்தேகத்தின் பேரில், விசாரணை என்ற பெயரில் அவர்கள் கொடும் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும்.

எனவே வன்னி தமிழ் மக்களை மீட்டு இலங்கை அரசிடம் ஒப்படைப்பது என்பதும் இனப்படுகொலைக்கு சமமான நடவடிக்கையே ஆகும்.

அமெரிக்க குடிமக்கள் என்ற முறையில், இந்த நடவடிக்கையில் பசிபிக் கமாண்ட் ஈடுபடக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம். அவர்களது ரத்தம் எங்களது கரங்களில் படிவதை நாங்கள் விரும்பவில்லை.

இந்த நடவடிக்கைக்குப் பதில், போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். முற்றுகைக்குள்ளான மக்கள் தங்களது பகுதிகளில் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.