தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த ‘மனநோயாளி’

ராமநாதபுரம் : தூங்கி கொண்டிருந்த உறவினரின் குழந்தைகளை கொடூரமாக அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மனநோயாளியை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே வாணி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். மதுரை சிலைமானில் வசித்து வந்த இவரது மைத்துனர் அருள்செல்வம்(27), மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை வாணி அருகே காட்டுப்பள்ளிவாசலில் மந்திரிப்பதற்காக அழைத்து வந்திருந்தனர்.


உறவினர் நவநீதகிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்த அருள்செல்வம் நேற்று காலை 5.30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் கவிதா(7) கோகுல்தாஸ்சின்(4) தலையை பிடித்து தரையில் மோதியதோடு உருட்டு கட்டையால் அவர்களை தாக்கினார். இதில், கவிதா சம்பவ இடத்தில் இறந்தாள். கோகுல்தாஸ், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான். இவர்களை கொலைசெய்த மனநோயாளி அருள்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

குழந்தைகளின் பாட்டி கூறுகையில், “சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டிருந்த எனது மகன் அருள்செல்வத்திடம் மகள் சித்ராதேவியின் குழந்தைகள் அதிக பாசத்துடன் பழகிவந்தனர். நேற்று காலை வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். அப்போது வீட்டிற்குள் இருந்து கட்டையால் அடிக்கும் சத்தம் கேட்டது.

“உள்ளே ஓடிப்போய் பார்த்தபோது குழந்தைகள் இருவரும் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தனர். நான் அலறியவாறு அவர்களை தூக்கிக்கொண்டு வெளியே வந்தேன். அப்போது பின்னால் வந்த எனது மகன், மீண்டும் குழந்தைகளின் தலையில் உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு ஓடிவிட்டான். இதில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக பலியாகினர்’ என்றார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.