முன்னாள் மாணவனின் வெறிச்செயல் : துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலி

வின்னென்டென் : ஜெர்மனியில் பள்ளிக்குள் நுழைந்த முன்னாள் மாணவன், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஜெர்மனி, தென்மேற்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நேற்று காலை மாணவர்கள் வழக்கம் போல் தங்களது வகுப்புகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கறுப்பு உடை அணிந்து சென்ற ஒரு வன் கண்மூடித்தனமாக மாணவர்களை நோக்கி சுட்டான். இதில், பள்ளி மாணவர்கள், முதியவர் உள்ளிட்ட 10 பேர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். இதையடுத்து, பள்ளி வளாகத்திலிருந்து அந்த நபர் தப்பியோடிவிட்டான்.சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளியில் தாக்குதல் நடத்திய நபர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்ற விவரம் தெரியவந்தது.

ஜெர்மனி பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.கடந்த 2006ம் ஆண்டு முகமூடி அணிந்து பள்ளிக்குள் நுழைந்த மர்மநபர், மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதில், 11 மாணவர்கள் காயமடைந்தனர். அது போலவே, 2002ம் ஆண்டு நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் 17 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், நேற்று மீண்டும் நடந்துள்ள இந்த சம்பவம், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரைப் பிடிக்க போலீசார் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.