அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு எந்தவொரு ஆயுதமும் இல்லை: அமைச்சர் முரளீதரன் (கருணா

அரசாங்கத்திடம் கையளிப்பதற்கு தன்னிடம் எந்தவொரு ஆயுதமும் இல்லை என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஸ்தாபகத் தலைவரான விநாயகமூர்த்தி முரளீதரன் கடந்த திங்கட்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து தற்போது அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.

“தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் தான் ஆயுதங்கள் இருந்தன.என்னிடமோ என்னைச் சார்ந்தவர்களிடமோ ஆயுதங்கள் இல்லை.எமது பாதுகாப்பை தற்போது அரசாங்கம் தான் வழங்குகின்றது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அண்மையில் ஆயுதங்களை கையளித்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் “இந்த ஆயுதக் கையளிப்பை முழுமையான கையளிப்பாகக் கருத முடியாது.குறிப்பாக இந்த கையளிப்பின் போது அவர்களினால் பிஸ்டல்கள் எதுவும் கையளிக்கப்படவில்லை” எனக்குறிப்பிட்டார்.

அதேவேளை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளரான ஆசாத் மௌலானா கூறுகின்றார்.

அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் தங்கள் அமைப்பில் எந்தவொரு ஆயுதமும் தற்போது இல்லை எனவும் அனைத்தும் கையளிக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.