தட்ஸ்தமிழ் வாசகர்கள் உதவி-சிறுவனுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை

திருச்சி: இருதய நோயால் அவதிப்பட்டு, சிகிச்சைக்குப் பணமின்றி தவித்து வந்த திருச்சி சிறுவன் நாகேந்திரனுக்கு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. தனக்கு உதவிய தட்ஸ் தமிழ் வாசகர்களுககு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று அவரது தந்தை கூறினார்.

திருச்சி கீழ்கண்டார் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (30), இவர் பொன்மலை காந்தி மார்க்கெட்டில் பழம் வாங்கி வந்து தலையில் வைத்து தினசரி வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா (25). கூலி வேலை செய்கிறார். இவர்களுக்கு விக்னேஷ் (5), நாகேந்திரன் (3) என்ற இரண்டு மகன் உள்ளனர்.

இதில் நாகேந்திரனுக்கு இதயத்தில் சிறு ஓட்டை இருந்துள்ளது. இதயத்தில் நல்ல ரத்தத்தையும், அசுத்த ரத்தத்தையும் பிரிக்கும் இரு வால்வுகளும், நாகேந்திரனின் இதயத்தில் ஒரே பக்கத்தி்ல் அதாவது வலது பக்கத்தில் இருந்தன.

இதனால் ஒரு வால்வைப் பிரித்து இடப் பக்கம் வைத்து இருத அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இருதயக் கோளாறு காரணமாக நாகேந்திரன் பெரும் அவஸ்தைக்கு ஆளானான். நிற்கக் கூட முடியாத நிலையும் ஏற்பட்டது.

திருச்சி அரசு மருத்துவமனை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்குப் போயும் பிரச்சினைக்கு வழி ஏற்பட்ட பாடில்லை.

இதையடுத்து தனது மனைவியின் தாலியை விற்று கிடைத்த பணத்தை வைத்து திருச்சி தனியார் மருத்துவமனையை அணுகினார் நாகேந்திரனின் தந்தை.

பரிசோதனை மற்றும் சிகிச்சை செய்துள்ளனர். அதற்கும் பலன் இன்றி அவர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர்.

அப்போலோ மருத்துவ மனையில் பரிசோதனைகளை முடித்த நிலையில் சிறுவனுக்கு இருதய ஆபரேஷன் செய்ய ரூ 2 லட்சம் தேவை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் பணம் கிடைக்காமல் நாகேந்திரன் குடும்பம் தத்தளித்தது. இந்த செய்தியை தட்ஸ்தமிழில் வெளியிட்டோம். இதைப் பார்த்து நமது வாசகர்கள் பலர் வழக்கம் போல தாராள மனதுடன் நாகேந்திரன் குடும்பத்தினருக்கு பண உதவிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் பலர் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நாகேந்திரன் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

நேற்று (10ம் தேதி) மாலை 4 மணி அளவில் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதுகுறித்து நமக்குத் தகவல் தெரிவித்த நாகேந்திரனின் தந்தை ராமச்சந்திரன், நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ராமசந்திரனின் கை பேசி எண்- 99656-40696

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.