இன்போஸி்ஸ்: 20000 பொறியாளர்கள் நியமனம்!

பெங்களூர்: இந்தியாவின் முதல்நிலை ஐடி நிறுவனமான இன்போஸிஸ் இந்த ஆண்டுமட்டுமே 20000 பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை உத்தரவு வழங்குகிறது. அதுவும், வழக்கத்தைவிட 8.3 சதவீத அதிக சம்பளத்தில்.

இதே துறையில் முன்னணி நிறுவனங்களாகத் திகழும் டிசிஎஸ், விப்ரோ போன்றவை முடிந்தவரை பணியாளர்களைக் குறைத்து வரும் சூழலில் இன்போஸிஸ் நிறுவனம் புதிய பொறியாளர்களை அதுவும் அதிகபட்ச சம்பளத்துக்கு நியமிக்கப் போவதாக அறிவித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 முதல் 3.25 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுமாம். இந்த நெருக்கடியான காலகட்டத்திலும், திறமையாளர்களைப் புறக்கணித்து விடக் கூடாது என்பதற்காகவும், அவர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்துவதற்காகவே இம் முடிவுக்கு வந்துள்ளதாகவும் இன்போஸிஸ் துணைத் தலைவர் நந்திதா குஜ்ஜார் கூறியுள்ளார்.

இந்த புதிய பொறியாளர்கள் அனைவரும் கடந்த ஆண்டு பல தொழில்நுட்பக் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை உத்தரவு மற்றும் வேலையில் சேர வேண்டிய தேதி குறித்த கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூக்கள் ஒத்திவைப்பு:

அதே நேரத்தில் வழக்கமாக ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கேம்பஸ் இன்டர்வியூ செய்ய பிரபல கல்லூரிகளில் ரவுண்டு அடிக்கும் இன்போசிஸ் நிறுவனம் இந்த ஆண்டு இத்திட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து ஹைதராபாத்தில் நடந்த இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பி்ல் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இன்போசிஸ் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,

இந்த ஆண்டு தேவையான 25 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்துவிட்டதால் புதியவர்களுக்கு இனி வாய்ப்பு அளிக்க முடியாது. அதேபோல் கேம்பஸ் இன்டரிவியூவையும் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.

இளைஞர்கள் தகவல் தொழில்நுட்ப துறையில் தான் வேலையில் சேர வேண்டும் என நினைக்க கூடாது. மற்ற துறைகளிலும் முயற்சி செய்ய வேண்டும். தற்போது பின்னடைவை சந்தித்துள்ள இந்த துறை மீண்டு வர இரண்டு ஆண்டுகளாகும். ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாட்டோம் என்றார் கோபாலகிருஷ்ணன்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.