நெற்குன்றத்தில் அமைகிறது என்எஸ்ஜி படைத் தளம்

சென்னை: சென்னையில் தேசிய பாதுகாப்புப் படைப் பிரிவுத் (என்எஸ்ஜி கமாண்டோ போர்ஸ்) தளம் நெற்குன்றத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகே இந்தப் படையின் முகாமை அமைக்க காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது. இதனைப் பார்வையிட்ட மத்திய உள்துறை அமைச்சகம், ரா, ஐபி, என்எஸ்ஜி படையின் அதிகாரிகள் குழு நெற்குன்றம் பகுதியை தேர்வு செய்துள்ளது.

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள 90 ஏக்கர் நிலத்தில் இந்த மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடம் சென்னை விமான நிலையத்திலிருந்து 19 கி.மீ. தூரத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தங்களது மையத்தை அமைக்க 1,000 ஏக்கர் நிலப் பரப்பை என்எஸ்ஜி அதிகாரிகள் கோரினர். ஆனால், சென்னைக்கு அருகே அவ்வளவு பெரிய இடம் கிடைப்பது கடினம் என்பது சுட்டிக் காட்டப்பட்டதால் 90 ஏக்கர் நிலமே போதும் என்று கூறிவிட்டனர்.

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலயைடுத்து சென்னை, கொல்கத்தா உள்பட முக்கிய இடங்களில் நான்கு என்எஸ்ஜி கமாண்டோ மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தென்னகத்தில் இதை பெங்களூரில் அமைக்க வேண்டும் என்றும், ஹைதராபாத்தில் அமைக்க வேண்டும் என்றும் அந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு நெருக்குதல் தந்தன. அதே போல இதை சென்னையில் அமைக்க வேண்டும் என தமிழக அரசும் வலியுறுத்தியது.

இறுதியில் சென்னையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

நெற்குன்றத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ள தகவலை முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் மூலம் நேற்று பிரதமர் மன்மோகன் சி்ங் தெரிவித்தார்.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.