உணவுக் கப்பலை புலிகள் தாக்கவும் இல்லை; உணவுப் பொருட்களை பறிக்கவும் இல்லை; வன்னியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர்

நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை. கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்” என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளமை குறித்து லண்டன் பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிபிசி தமிழோசையில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை (09.03.09) ஒலிபரப்பாகிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக ஒரு தொகுதி உணவுப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது குறித்த செய்திகளை நேயர்கள் நேற்றைய தமிழோசையில் கேட்டிருப்பீர்கள். அந்த கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள் முழுமையாக இறக்கப்படாமலேயே அந்தக் கப்பல் இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்குத் திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே. பார்த்தீபனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது…

500 மெற்றிக் தொன் உணவுடன் நேற்று 7:30 நிமிடமளவில் கப்பல் வந்தது. நேற்று மாலை 5:30 நிமிடம் வரையில் 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் இறக்கப்பட்டன. மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு இன்னும் எங்களுக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. இன்று காலையில் 7:00 மணியளவில் கப்பல் மீண்டும் ஆழ்கடலில் இருந்து மாத்தளன் பகுதிக்கு வந்திருந்தது. இருந்தும் கடும் காற்று, மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நாங்கள் உணவுப்பொருட்களை இறக்க முடியவில்லை.

தற்போது கப்பல் எங்கே இருக்கிறது?

கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இங்கிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அப்படித்தான் கூறிச் சென்றனர்.

அதேசமயம் அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதன் காரணமாகவே அந்தக் கப்பல் ஆழ்கடலை நோக்கி சென்றிருப்பதாகவும் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருக்கின்றது. அப்படி ஏதும் தாக்குதலை நீங்கள் பார்த்தீர்களா! கேட்டீர்களா!?

நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான் காணவில்லை.

அங்கு மக்களின் உணவுத் தேவைகள் எப்படி இருக்கின்றன?

மக்களின் உணவுத் தேவைகளுக்குத் தேவையான உணவுகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. பெப்ரவரி மாதம்தான் கப்பல் மூலம் உணவு எடுத்துவர ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் ஆரம்பத்தில் குறைந்தளவு உணவுப் பொருட்களே எடுத்து வர முடிந்ததினால் மக்களுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களையும் எங்களால் வழங்க முடியவில்லை. இருப்பினும் தற்போது நேற்று ஆரம்பித்தபடி இவ்வாறு பெருந்தொகையான உணவுப் பொருட்கள் கொண்டு வர முடியும் என்றால் நாங்கள் தொடர்ந்து மக்களுக்குத் தேவையான உணவை வழங்க முடியும். இப்பொழுது மக்கள் உணவைப் பெற முடியாத நிலையில் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கொண்டு வந்த உணவு வழங்குவதற்குப் போதுமானதாக இல்லை.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்னமும் எத்தனைப் பேர் இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரம் உங்களிடம் இருக்கிறதா?

நாங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.

அதே சமயத்தில் இது தொடர்பாக அரசாங்க தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் சொல்லப்படும் புள்ளி விபரக் கணக்குப்படி 70 ஆயிரம் பொதுமக்கள்தான் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

உண்மையில் அது தொடர்பில் எனக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இங்கே இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள், உதவி அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின் வாயிலாக, அண்ணளவாக 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கு 30 ஆயிரம் பேர் இருப்பதாக நாங்கள் எங்களுடைய அமைச்சுகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.

அவர்களுடைய மதிப்பீட்டின் படி தற்போது இருக்கும் உணவு அங்கிருக்கும் பொதுமக்களுக்கு எத்தனை நாட்கள் வரும்?

நாங்கள் நேற்று இறக்கிய 145 மெற்றிக் தொன் உணவோடு சேர்த்து, மொத்தமாக இங்கு வந்த 500 மெற்றிக் தொன் உணவையும் கிட்டதட்ட 34 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு வழங்க போதுமானவை என கணக்கிட்டு அதற்கேற்ப வழங்க நடவடிக்கை எடுத்திருந்தோம். ஆனால் வந்த உணவுப் பொருட்களை இறக்காமல் கப்பல் திரும்பி போனபடியால் குறிப்பிட்ட சிறுதொகையான மக்களுக்கே அதனை வழங்க முடியும். மீண்டும் கப்பல் உணவுப் பொருட்களுடன் வரும்போது மீதி மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கக்கூடியதாக இருக்கும்.

உணவுத் தேவைகள் குறித்து உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் நீங்கள் தெரியப்படுத்துகிறீர்களா?

முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு நாங்கள் தெரியப்படுத்தியிருக்கின்றோம்.

உங்களுடைய கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலித்து நீங்கள் விரும்பும் கால எல்லைக்குள் உணவுப் பொருட்கள் அங்கு வந்து கொண்டிருக்கின்றனவா?

தற்போது இந்த 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் வந்திருப்பது ஒரு முன்னேற்றம் என கருதுகின்றேன்.

அங்கிருக்கும் மக்களின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் எதைப் பார்க்கின்றீர்கள்? அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?

தற்போது இருக்கின்ற முக்கியமான பிரச்சினை உணவு சரியாக வழங்கப்பட வேண்டும், மருந்துப் பொருட்கள் இங்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஏனைய குடிநீர் வழங்கல், கழிவு அகற்றல், மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அவர்களுக்கு ஒழுங்கான முறையில் வழங்கப்பட வேண்டும். அதைத்தான் நாங்கள் எங்களுடைய மேலதிகாரிகளிடம் கூறுகின்றோம். இப்பொழுது இங்கே கடும் மழை பெய்து வருகின்றது.

அதிகளவிலான மக்கள் கிட்டதட்ட 25 இல் இருந்து 30 ஆயிரம் மக்கள் கடல் நீரேரி பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் பகுதி தாழ்நிலமாக இருப்பதனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக அந்த நீரேரி பகுதி எங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குதான் அவர்கள் ‘தறப்பாள்’ மூலம் தற்காலிக கொட்டில்கள் அமைத்து இருந்து வருகின்றனர். அந்த தற்காலிக கொட்டில்களில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் வீதி வழியே குழந்தைகளுடன் நிற்பதைப் பார்க்கின்றோம். அவர்களை தங்க விடுவதற்குப் பொதுவான இடம் ஒன்று இப்போது இல்லாமல் இருக்கின்றது. அவர்கள் இரவுப் பொழுதில் அல்லது மழை தொடர்ந்து பெய்தால் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சிறு சிறு பதுங்கு குழிகளும் அவர்கள் வெட்டியிருக்கின்றனர். அந்த பதுங்கு குழிகளும் வெள்ளத்தால் நிறைந்திருக்கின்றன. ஆகவே, எறிகணை வீச்சு நடைபெற்றால் அந்த மக்கள் அனைவரும் உயிர் இழப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன.

அதே சமயத்தில் அங்கு வரும் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் பறித்துச் செல்வதாக சிறிலங்கா அரச தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு வந்ததா?

வருகின்ற உணவுப் பொருட்களை நாங்கள் பொதுமக்களுக்குப் பிரித்து வழங்குகின்றோம். வழங்குகின்ற பொறுப்பையும் நாங்களே செய்கின்றோம்.

உங்களைப் போன்ற அரசாங்க செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாடுகள், அழுத்தங்களை மீறி செயற்படும் சூழல் இருக்கிறதா!

இதுவரை நாங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றோம் என்றார் கே.பார்த்தீபன்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.