நம்பிக்கை வாக்கெடுப்பில் ‌ஒ‌ரிசா முத‌‌ல்வ‌ர் நவீன் பட்நாயக் வெற்றி

ஒரிசா மாநில சட்டசபையில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பீஜூ ஜனதா தள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. அவையில், தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் ஒரு வரி தீர்மானத்தை முதல்வர் நவீன் பட்நாயக் கொண்டுவந்தார்.

காங்கிரஸ், பாஜக உறுப்பினர்களின் கடும் கூச்சல்-குழப்பத்திற்கு இடையே தீர்மானம் குரல்வாக்கெடுப்பு மூலம் வெற்றிபெற்றதாக சட்டசபை சபாநாயகர் கிஷோர் மொஹந்தி அறிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே 74 எம்எல்ஏ-க்களை ஒரிசா மாநில ஆளுநர் எம்.சி. பண்டாரி முன்னிலையில் முதல்வர் நவீன் பட்நாயக் அணிவகுத்து நிற்கச் செய்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றிபெற்றுள்ளார்.

முன்னதாக சட்டசபையில் கடுமையான கூச்சல்-குழப்பம் நிலவியது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதுபோன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதால், வாக்காளர்களின் மனதில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர்.

இது தேர்தல் நடத்தை நெறிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். காங்கிரசின் கருத்தை பாஜக-வும் ஆதரித்தது.

ஆனால், இதற்குப் பதிலளித்த சபாநாயகர், இதேபோன்ற முன்னுதாரணங்கள் அசாம், மேகாலயா மாநிலங்களில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின் சட்டசபையைக் கூட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அவர் கூறினார்.

பிஜூ ஜனதா தள அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து, நவீன் பட்நாயக் அரசு பெரும்பான்மையை இழந்தது.

நவீன் பட்நாயக் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர், கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டார்.

Source & Thanks : tamil.webdunia

Leave a Reply

Your email address will not be published.