யாழ்ப்பாணத்தில் காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு

காணாமல் போன மூதாட்டி ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளர். அவரின் சடலம் வீட்டுப் பின்பறத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாட்டின் வீதியைச் சேர்ந்த வேதநாயகம் லில்லிமலர் (வயது 80) என்பவர் கடந்த டிசெம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினமான 25ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் என்பவற்றில் உறவினர்கள் இது தொடர்பான முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற இறந்தவரின் வீட்டில் குடியிருந்த பெண்மணி ஒருவர், குறிப்பிட்ட மூதாட்டியைத் தனது கணவர் கொலை செய்து வீட்டின் பின்புறத்தில் புதைத்துள்ளதாகவும், தன்னை குறிப்பிட்ட தினத்தில் இருந்து வெளியில் செல்ல விடாது தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி ரி.எஸ். ருக்மல் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி இ.வசந்தசேனனுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த நீதிபதி முன்னலையில் பொலிஸார் சடலத்தைத் தோண்டி எடுத்தனர். சடலம் புதைக்கப்பட்ட இடம், ஓலையால் சுற்றி அடைக்கப்பட்டு மலசல கூடம் போன்று காட்சியளிக்கும் வகையில் குழியின்மேல் சிமெந்து போடப்பட்டு எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் காணப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரிகள் எஸ். சுகுந்தன், கே.இரத்தினசிங்கம் ஆகியோர் முன்னிலையில் சடலம் வெளியே எடுக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் வீட்டில் இருந்தவரைத் தேடி வருகின்றனர். சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : sankathi.com

Leave a Reply

Your email address will not be published.