இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்: சர்வதேச அனர்த்த அமைப்பு

வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மிகவும் மோசமான மனிதாபிமான பிரச்சினை உருவாகியுள்ளதாக சர்வதேச அனர்த்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வன்னிப் பொதுமக்கள் பாதுகாப்பை கவனத்திற் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும், இந்தியா பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோர் மோதல் தவிர்ப்பை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோதல்களின் காரணமாக பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருவதனால் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பாவி தமிழ்ப் பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் இறுதி யுத்த முனைப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.