குமரியை கலக்கிய டிரவுசர் கொள்ளயைர்கள் கைது

கருங்கல்: டிரவுசர் மட்டும் அணிந்து நூதன முறையில், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி வந்த கும்பலை கன்னியாகுமரி போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதமாக இரவு நேரங்களில் வீட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டில் இருப்பவர்களை தாக்கி நகை, பணம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை கொள்ளையடிப்பது தொடர்ந்து வந்தது.

இந்தத் திருட்டுக் கும்பல் டிரவுசர் மட்டுமே அணிந்தி திருடுவது வழக்கம். இவர்களைப் பிடிக்க நெல்லை டிஜஜி கண்ணப்பன் உத்தரவுபடி எஸ்பி கபில்குமார் சரத்கர் மேற்பார்வையில் குளச்சல் ஏஎஸ்பி அபிஷேக் தீக்ஷத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு ஆளூர் ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையில் இடம் பெற்றிருந்த கருங்கல் இன்ஸ்பெக்டர் முருகேசன், நித்திரவிளை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்போஸ்கோ மற்றும் போலீசார் ரயில்வே ஸ்டேஷன் வந்து அவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜன், பட்டுக்கோட்டையை சேர்ந்த ரவி, பரமசிவம், முருகேசன் எனவும் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கேரளா, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் நடந்த திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

குமரி மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, களியாக்கவிலை, மற்றும் பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களை ஓப்புக் கொண்டனர்.

இவர்களிடம் இருந்து 70 பவுன் நகை, செல்போன்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.