டிப்ளமோ, பட்டப்படிப்பு இரண்டும் சமம் :பதவி உயர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி

புதுடில்லி : பதவி உயர்வு வழங்கும் போது டிப்ளமோ படித்தவர்களையும், பட்டப் படிப்பு படித்தவர்களையும் சரிசமமாக அரசு பரிசீலிக்கலாம். இதில், அரசியல் சட்ட ரீதியான பிரச்னை எதுவும் இல்லை என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உ.பி., மாநில பொதுப்பணித்துறையில் வேலை பார்ப்பவர்களில், டிப்ளமோ படித்தவர்கள் உதவி பொறியாளர்களாக பதவி உயர்வு பெற வேண்டும் எனில், தகுதித் தேர்வை பாஸ் செய்ய வேண்டும் அல்லது தேவையான தொழில் நுட்ப தகுதியை பெற வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை அம்மாநில அரசு 2004ம் ஆண்டில் ரத்து செய்தது. இதை எதிர்த்து திலிப் குமார் கார்க் என்பவரும், பட்டப்படிப்பு படித்த மற்ற சிலரும் அலகாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த ஐகோர்ட், அரசு கொண்டு வந்த விதிமுறை சரியானதே என உத்தரவிட்டது.

இதையடுத்து, கார்க்கும் மற்றவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் மார்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டப்படிப்பு படித்தவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், “டிப்ளமோ படித்தவர்களையும், பட்டப்படிப்பு படித்தவர்களையும் சமமாக அங்கீகரித்ததன் மூலம், அரசியல் சட்டத்தின் 14வது பிரிவு மீறப்பட்டுள்ளது’ என்றார்.

இதன்பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:டிகிரி படித்தவர்களையும், டிப்ளமோ படித்தவர்களையும் சரிசமமாக அங்கீகரிக்கலாம். இதில், தவறு எதுவும் இல்லை. அரசியல் சட்ட மீறலும் இல்லை. பதவி உயர்வு வழங்கும் போது, டிப்ளமோ படித்தவர்களையும், டிகிரி படித்தவர்களையும் சரிசமமாக பாவிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து அரசே முடிவு செய்து கொள்ளலாம். அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.