தரங்கம்பாடி கடற்கரையில் ஒதுங்கிய வெடிபொருட்கள் : கடற்கரையோரம் வெடிக்க வைப்பு

சீர்காழி : சீர்காழி அடுத்த தரங்கம்பாடி கடலில் கரை ஒதுங்கிய பச்சை நில பையில் இருந்து எடுக்கப்பட்ட வெடிபொருள் மற்றும் வெடி குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த தரங்கம்பாடி மீனவர் கிராம கடற்கரையோரம் நேற்று காலை பச்சை நிற “பேக்’ கரை ஒதுங்கியது. அப்பகுதி மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், தஞ்சை சரக டி.ஐ.ஜி., அபய்குமார் சிங், நாகை எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ் மற்றும் போலீசார் மர்ம பையை கைப்பற்றினர்.

டி.ஐ.ஜி., முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் பையை பிரித்து பார்த்ததில் அதில் ஏ.கே 47 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 27 தோட்டாக்கள், மூன்று கையெறி குண்டு, பாலித்தீன் கவரில் அடைத்து வைத்த வெடி மருந்து, சிறிய டப்பாவில் திரவ வெடி குண்டு, துப்பாக்கி துடைக்க பயன்படுத்தும் எண்ணெய், மூன்று சயனைடு குப்பிகள், இலங்கையின் வரைபடம் மற்றும் உயிர் காக்கும் மருந்து பொருட்கள், பெண்கள் அணியும் ஆடைகள், பச்சை நிற சீருடை உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதே பகுதியில் வெடி பொருட்கள் நான்கு அடி குழியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது. தற்போது, இலங்கையில் போர் நடப்பதால் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட பெண் கடல் புலிகள் இவற்றை பயன்படுத்தியதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். கடந்த 8ம் தேதி இதே போல், ஒரு பை சந்திரபாடி மீனவனர்கள் கண்டெடுத்துள்ளனர். அதையும் பாதுகாத்து வைத்திருந்தனர்.

திருச்சியில் இருந்து வெடி குண்டு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஐந்து கையெறி குண்டு, வெடி மருந்துகள், திரவ வெடிகுண்டுகளை நேற்று மாலை 6.30 மணிக்கு கடற்கரையோரம் உள்ள திறந்தவெளி பகுதியில் வெடிக்க செய்தனர். சந்திரபாடி, தரங்கம்பாடி பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெடிகுண்டு, தோட்டாக்கள் நிறைந்த பைகள் கிடைத்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.