இலங்கை தமிழர்களுக்கு அ.தி.மு.க., ரூ.ஒரு கோடி நிதி! உண்ணாவிரதத்தில் ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: இலங்கைத் தமிழர்கள் நிவாரணத்துக்காக தன் சொந்தப் பணத்தில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி அளித்த ஜெயலலிதா, அ.தி.மு.க., சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்ற உண்ணாவிரதத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூடப் பருகாமல் எட்டு மணி நேரம் அமர்ந்திருந்தார்.இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டதாகக் கூறி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது.


சென்னையில் வடசென்னை, தென்சென்னை மாவட்டம் சார்பில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன், நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஜெயலலிதா தலைமை வகித்து துவக்கி வைத்தார்.உண்ணாவிரதத்தில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேடைக்கு முன் மற்றும் பக்கவாட்டில் உள்ள இரு இடங்களிலும் நாற்காலிகளும், சாமியானா பந்தல்களும் போடப்பட்டிருந்தன. மகளிர் அணியினரும், இளம் பெண், இளைஞர் பாசறையைச் சேர்ந்தவர்களும் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டி கொடுக்கும் வகையில் பெரிய உண்டியல், உண்ணாவிரத மேடை முன் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா தனது சொந்தப் பணத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை வழங்கினார்.ஜெயலலிதா பேசுகையில், “”இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்காக ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

உச்சிமுகர்ந்து, முத்தம்: வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுக்க இருக்கின்றனர் என்பதை விரைவில் அக்கட்சிகள் உணரும்,” என ஆவேசமாக பேசினார்.ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வரதராஜன், தேசியவாத காங்கிரஸ் தமிழக தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தேசிய லீக் தலைவர் பஷீர்அகமது உள்ளிட்ட தலைவர்களும் பேசினர்.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது நீண்ட வரிசையில் கட்சியினரும், தொண்டர்களும் காத்திருந்து உண்டியலில் பணத்தை செலுத்தினர். உண்ணாவிரத மேடையில் திடீரென்று ஒரு பள்ளிச் சிறுவன் ஏறினான். அவன் கையில் வைத்திருந்த பாலிதீன் பையில் நாணயங்கள் இருந்தன; அந்த நாணயங்களை உண்டியலில் கொட்டினான்.இதைக் கண்டு ஜெயலலிதா மனம் நெகிழ்ந்தார். அந்த சிறுவனை தன் அருகே அழைத்து விசாரித்தார். பின், அந்த சிறுவனை உச்சிமுகர்ந்து, முத்தம் தந்து, முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டினார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசி முடித்ததும், தன் கட்சியின் மாநில பேச்சாளர்களை, தானே தேர்வு செய்து ஜெ., பேச வைத்தார்.எஸ்.எஸ்.சந்திரன் பேசும்போது, கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது. உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் சோர்வு அடையாமல் இருப்பதற்காக இடையிடையே கலைக் குழுவினர், கட்சிப் பாடல்களைப் பாடினர்.
மாலை 3.40 மணிக்கு வைகோ மேடைக்கு வந்தார். ம.தி.மு.க., சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்து, அந்தப் பணத்தை தன் கைப்பட உண்டியலில் செலுத்தினார். பின் வைகோ தனது பேச்சை துவங்கி, 50 நிமிடங்கள் பேசினார்.

அவர் பேசிய பின், உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா பேசினார். அப்போது அ.தி.மு.க., சார்பில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இருந்து திரட்டப்படும் இந்த நிதி, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களிடம் சேர்க்கப்படும் என்றார்.மாலை 5 மணி வரை ஒரு சொட்டு தண்ணீர் கூடப் பருகாமல், உண்ணாவிரதம் மேற்கொண்ட ஜெயலலிதாவிடம், பழச்சாறு டம்ளரை வைகோ வழங்கினார். அதை வாங்கிக் குடித்து ஜெயலலிதா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

ஜெ., உண்ணாவிரத துளிகள்:
* உண்ணாவிரத மேடைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் வரதராஜன், மோகன் எம்.பி., இருவரும் மதியம் 12 மணிக்கு வந்தனர். மேடையில் பேசி முடித்த பின், சிறிது நேரத்தில் கிளம்பிச் சென்றனர்.
* எம்.ஜி.ஆரைப் போல வேடம் அணிந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டும் உண்டியலில் பணத்தைச் செலுத்தினர்.
* நிதி வழங்குவதற்கு வந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திடீரென்று ஜெயலலிதா முன், ஆடிப் பாடினர். இவர்களது திடீர் ஆட்டத்தால் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின், நிதி வழங்க வந்தவர்களை போயஸ் தோட்டப் பணியாளர்கள் பரிசோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
* வயதான கட்சித் தொண்டர் ஒருவர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பாட ஆசைப்பட்டார். ஜெயக்குமார் அழைப்பின்படி மேடைக்கு வந்த பெரியவர், திடீரென ஜெயலலிதாவின் காலில் விழச்சென்றார். அப்போது அவர் தடுக்கப்பட்டார். சிறிது நேர தள்ளுமுள்ளுக்குப் பின் பாட அனுமதிக்கப்பட்டார். அவர் பாட்டை ஜெயலலிதா ரசித்துக் கேட்டார்.
* உண்ணாவிரதத்தில் நடிகர்கள் எஸ்.எஸ்.சந்திரன், ஆனந்தராஜ், குண்டு கல்யாணம், சூர்யகாந்த், நடிகைகள் விந்தியா, சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
* யார் யார் பேச வேண்டும் என்ற பட்டியலை ஜெயக்குமார் அவ்வப்போது ஜெயலலிதாவிடம் கொடுத்தார். பேச்சாளர்களை அவர் தேர்வு செய்தார்.
* இசைக்குழு நடத்திவரும் நவரசம் பன்னீர் மேடையில் பாடி முடிந்ததும், “35 ஆண்டுகளாக கட்சிக் கொள்கைப் பாடலை பாடி வருகிறேன். எனக்கு இன்று தான் ஜெயலலிதாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது’ என புளகாங்கிதம் அடைந்தார்.
* செங்கல்பட்டில் 1985ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த போட்டோவை ஒரு தொண்டர் தூக்கி வந்தார். அதை வாங்கி வைக்கும்படி ஜெயலலிதா கூறினார்.
* காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தஞ்சாவூர் ஜெயபால், ஜெயலலிதாவைச் சந்தித்து சால்வை கொடுத்தபோது, “உண்மையான காங்கிரஸ்காரன்ம்மா’ என்று கூறியதும், ஜெயலலிதா சிரித்தார்.

மத்திய, மாநில அரசுகள் மீது சரமாரி குற்றச்சாட்டு: இலங்கைத் தமிழர்களுக்கு முழு ஆதரவு கொடுக்கும் வகையில், அங்கு உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம் நேற்று நடந்தது.சென்னையில் நடந்த போராட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா எட்டு மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், “”வரும் லோக்சபாத் தேர்தலில் தி.மு.க., – காங்., கூட்டணிக்கு சம்பட்டி அடி கிடைக்கும்,” என ஆவேசமாகக் கூறினார்.சென்னையில் உண்ணாவிரதத்துக்கு ஜெயலலிதா தலைமை வகித்தார். காலை 9.10 மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு வந்தார். இலங்கைத் தமிழர்களுக்கு நிதி திரட்டும் உண்டியல், மேடை முன் வைக்கப்பட்டிருந்தது. அதில், ஜெயலலிதா தனது சொந்தப் பணத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை வழங்கினார்.

உண்ணாவிரதத் துவக்கத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

கடந்த ஆண்டு இலங்கைக்கு அதிநவீன ஆயுதங்களையும், ராணுவ சாதனங்களையும் மத்திய அரசு அனுப்பி வைத்தது பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மறுக்கவில்லை. இந்திய பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், பிரதமருக்கு நெருக்கமான உயர்மட்ட உதவியாளர்கள் இலங்கைக்குப் பயணம் செய்ததாக வந்த செய்தியையும் மத்திய, மாநில அரசுகள் மறுக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை இருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதியும் எதிர்க்கவில்லை. தங்களது பதவியை ராஜினாமா செய்வோம் என மத்திய அரசை தி.மு.க., அமைச்சர்கள் மிரட்டவும் இல்லை. இதை கேள்வியாக நான் எழுப்பினால், “மத்திய அரசு அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம். இது கூட ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை’ என்று என்னை கருணாநிதி கேலி செய்கிறார்.பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என்று, இரட்டை நிலை பண்புகளைப் பற்றி சொல்வர். இலங்கைப் பிரச்னையில் கருணாநிதியின் செயல்பாடும் அப்படித் தான் இருக்கிறது. இலங்கை ராணுவ வீரர்கள் அரியானா மாநிலத்தில் சிறப்புப் பயிற்சி எடுத்தனர். கருணாநிதி ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

இலங்கையில் நடைபெறும் தமிழினப் படுகொலை மத்திய அரசு ஒப்புதலுடன் நடக்கிறது. விடுதலைப் புலிகளைச் சுடுகிறோம் என, இலங்கை ராணுவம் சொல்லலாம். ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, சாவது விடுதலைப்புலி போராளிகள் மட்டுமல்ல; அப்பாவித் தமிழர்களும் தான் என்பது தெளிவாகிறது.

மத்திய அரசில் சக்தி வாய்ந்த துறைகளைப் பெற்றிருக்கும் 10 அமைச்சர்கள், ஏன் தட்டிக் கேட்கவில்லை? மத்திய அரசை தி.மு.க., தாங்கிப் பிடிக்கிறது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரித்து ஆதரவை தி.மு.க., வாபஸ் பெற்றிருந்தால் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்.தனது உறவினர்களுக்கும், கட்சியினருக்கும் மத்திய அரசில் மிக முக்கியமான துறைகளைப் பெற்றுத்தருவதற்கு ஆதரவு வாபஸ் பெறுவோம் என பல முறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், தமிழ் மக்களின் உரிமை, தமிழ் மக்களின் நலம், தமிழ் மக்களின் பாதுகாப்பு என வரும்போது ஆதரவு வாபஸ் ஆயுதத்தை கருணாநிதி பயன்படுத்த மாட்டார்.தி.மு.க., ஆட்சியில் ஒவ்வொரு தேர்தல் வருகிறபோதும் ரவுடிகளை ஏவிவிடுகின்றனர். அப்பாவிகள் மீது வன்முறைச் செயல்களை கட்டவிழ்த்துவிடுகின்றனர். மேலிட நிர்பந்தத்தால் காவல்துறை வாய் மூடி, கைகட்டி நிற்கும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது

சிங்கள மக்களோடு சம உரிமை : இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்கள மக்களோடு சம உரிமை பெற்று வாழ வேண்டும். சட்டத்தின் முன் சமநிலை, கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்பிலும் சம உரிமை என்ற அவர்களுடைய கோரிக்கைகளை அ.தி.மு.க., ஆதரிக்கிறது. இலங்கை அரசின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்காக ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்.ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக தமிழக மண்ணில் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டார். அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.கருணாநிதிக்கு ஒரு ஆலோசனை கூறியிருந்தேன். அதாவது, இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரிடம் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேச வேண்டும். அதற்கு பிரதமரை கருணாநிதி நிர்பந்திக்க வேண்டும்; வலியுறுத்த வேண்டும் என்று.கருணாநிதி அதிமேதாவித்தனமான ஒரு யோசனையை வெளிப்படுத்தினார். அதாவது, தமிழக மக்கள் அனைவரும் தந்திகளை பிரதமருக்கு அனுப்பி வையுங்கள் என்றார். கருணாநிதியின் கட்டளையை தமிழக மக்கள் ஏற்கவில்லை.

கனிமொழி மற்றும் எம்.பி.,க்களிடம் ராஜினாமா கடிதங்களை கருணாநிதியே பெற்றுக்கொண்டார். சபாநாயகருக்கு அனுப்பி வைக்கவில்லை.இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சுகளைப் பேசியதற்காக சீமான், அமீர் கைது செய்யப்பட்டனர். சீமான் என்ன பேசினாரோ அத்தனையும் கருணாநிதியும் பேசியிருக்கிறார். சீமான் என்னென்ன வார்த்தைகளைக் கூறினாரோ அத்தனையும் கருணாநிதியும் முழங்கியிருக்கிறார். ஆனால், இன்று சீமான் சிறையில் இருக்கிறார். கருணாநிதியோ முதல்வராக இருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார்.இலங்கைத் தமிழர்கள் வாழ்வதற்கு வீடு இன்றி சொந்த நாட்டிலேயே அகதிகளாக அல்லப்பட்டுகின்றனர். தந்தி அனுப்புவதினாலும், ஹைகமிஷனில் கீழ்மட்ட அதிகாரி ஒருவரை கடிந்து கொள்வதாலும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தபிரயோஜனமும் இல்லை. அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக உணவையும், மருந்துகளையும் ஆடைகளையும் அனுப்பியிருக்க வேண்டாமா?உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் மத்திய, மாநில அரசுகளுக்கு மாபெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பதால் பசியால் வாடிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப் போவதில்லை. இந்தப் போராட்டம் ஓர் அடையாளம் தான்.

எல்லாரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. இதுவரை மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் வெற்றியடைந்து விட்டதாக நினைத்துக் கொணடிருக்கிறீர்கள். ஓர் அசட்டு தைரியத்தில் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அசட்டு தைரியத்திற்கு வரும் லோக்சபாத் தேர்தலில் தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுக்க இருக்கின்றனர் என்பதை விரைவில் தி.மு.க., – காங்கிரஸ் கட்சிகள் உணரும்.இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.