முப்பத்தேழு விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்: ‘ஓப்பனாக’ ஒப்புக்கொள்கிறார் வைகோ

சென்னை: “”விடுதலைப் புலிகள் 37 பேரை ஒன்றரை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்து, சோறு போட்டு, மருந்து கொடுத்து, சிகிச்சை அளித்தேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்குப் பிறகும், ஆறு மாதம் அவர்கள் என் வீட்டில் இருந்தனர்,” என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

.எழுத்தாளர் மதுராவின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. எழுத்தாளர் விக்கிரமன் தலைமையில் நடந்த விழாவில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ வெளியிட, முதல் பிரதியை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:என்னை எப்போதும் கேலி செய்யும் ஒரு ஏட்டில், நேற்று முன்தினம் மீண்டும் என்னை கேலி செய்து கார்ட்டூன் போட்டிருக்கின்றனர்.

கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட ஒரு குடும்பத்தினர் பற்றி, “இலங்கைப் பிரச்னை இருப்பது தெரியாதா?’ என நான் கேட்பது போல கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது (8.3.2009 “தினமலர்’ இதழில் வெளியான கார்ட்டூன்).அந்த ஏட்டின் ஆசிரியருடைய தந்தை, தமிழ் உணர்வில், திருவனந்தபுரத்தில், தமிழர்களுக்காக அந்த ஏட்டை ஆரம்பித்தார். தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறார்.என்னை கேலி செய்ய இதுவா கிடைத்தது? முதல்வர் கருணாநிதியைப் போல நான் உங்களை மிரட்டியதில்லை. ஜாதி பெயரைச் சொல்லியோ, ஏடுகளிலோ விமர்சித்ததில்லை. தீக்குளிப்பதை நான் ஊக்குவிப்பதில்லை. ஆனால், தீக்குளித்தவர்கள் தீயில் கருகும்போதும், ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றனர்.

புலிகளிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். திருடனுக்குக் கூட புலிகளிடம் காசு வாங்க எண்ணம் வராது. 37 புலிகளை ஒன்றரை ஆண்டுகள் எனது வீட்டில் வைத்திருந்து, சோறு போட்டு, மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்திருக்கிறேன். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்திற்குப் பிறகும் ஆறு மாதம் அவர்கள் என் வீட்டில் இருந்தனர்.அவர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி யார் என்பதை, காலம் வரும்போது கூறுவேன். உரிய நேரத்தில் ஆதாரத்துடன் பதிவு செய்வேன். அவர்களில் சிலர் சிகிச்சை முடிந்து சென்றுவிட்டனர். பின், 17 பேர் இருந்தனர்.அவர்களை போலீசார் கைது செய்யும் வாய்ப்பு எழுந்தபோது, அவர்களிடம் நச்சுக்குப்பியைக் கொடுத்து விடுமாறு கேட்டேன். இரவு முழுவதும் பேசி அவர்களிடமிருந்து நச்சுக்குப்பியைப் பெற்றேன். என் தம்பி, “நான் தான் பாதுகாத்து வைத்திருந்தேன். அது கடமை என கருதினேன்’ எனக் கூறி, ஓர் ஆண்டு சிறை சென்றான். அவனுக்கு நான் பதவி வழங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் தாயகத்தையே பார்த்ததில்லை.

நான் புலிகளிடம் காசு வாங்கியதாகக் கூறும் கருணாநிதிக்கு இதயம், மனசாட்சி கிடையாது. அவருக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.நாஞ்சில் சம்பத், சீமான், கொளத்தூர் மணி பேசியதில் தவறில்லை. நாட்டின் இறையாண்மையில், ஒருமைப்பாட்டில் எங்களுக்கு இல்லாத அக்கறையா? இவர்கள் அனைவரும், நாட்டின் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் பேசினர்.இவ்வாறு வைகோ பேசினார்.எழுத்தாளர் கவுதம நீலாம்பரன், ஓவியர் ஸ்யாம் வாழ்த்திப் பேசினர். வக்கீல் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மணிமாறன் நன்றி கூறினார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.