இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் : 3 அமைச்சர்கள் உட்பட 20 பேர் படுகாயம் ; 15 பேர் பலி

கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் தபால் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் மஹிந்தா விஜசேகராவுடன் 3 அமைச்சர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்,15 பேர் பலியாகியுள்ளனர். இலங்கையில் தெற்கு பகுதியில், மட்டாரா எனும் இடத்தில், அகுரேசா டவுனில் உள்ள ஒரு மசூதி அருகே விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மிலாடி நபியை முன்னிட்டு மட்டாரா பகுதியில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது . இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் சிலர் வந்திருந்தனர். அப்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது . தாக்குதலில் தெற்கு பிராந்திய முதல்வர் ஸ்ரீசேனாவும் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானயக்காரா கூறியதாவது : பலத்த பாதுகாப்பை மீறியம் நடந்துள்ள இந்த தற்கொலைப்படை தாக்குதலை விடுதலைப்புலிகள் த‌ான் நடத்தியுள்ளனர். விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.