புதுக்குடியிருப்பு இராணுவம் முற்றுகை வலயம் உடைக்கப்பட்டது: நேற்று மட்டும் 100 படையினர் பலி;450 பேர் காயம்

புதுக்குடியிருப்பை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முற்றுகை ஒன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறிலங்காப் படையினருக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், படையினரின் உடலங்களும், ஆயுதங்களும் களமுனை எங்கும் சிதறிக் கிடப்பதாகவும் களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முயற்சியை முறியடித்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் உடலங்கள் பெருமளவில் தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் குரலில் இம்மாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பை கைப்பற்ற முனைந்த படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் நான்கு நாள் தாக்குதலில் மட்டும் 450 வரையான படையினர் கொல்லப்பட்டதாகவும் 1000 ற்கு மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் மட்டும் 100 ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும், 450 வரையான படையினர் படுகாயங்களுக்கு உள்ளானதாகவும் புலிகளின் குரல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வன்னியில் இன்று புயலுடன் கூடிய மழையினால் அங்குள்ள மக்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளனர். மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் பல புயலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மழைக்குள் மக்கள் இருக்க வேண்டிய அவலம் எழுந்துள்ளது.

இதேவேளை பொது மக்களை இலக்கு வைத்து இன்றும் படையினர் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது மக்களுக்கு ஏற்பட்ட சேதவிபரம் குறித்து இதுவரை தெரியவரவில்லை.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.