முல்லைத்தீவில் உணவு பொருட்கள் 142 தொன் இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலை திரும்பியது

வன்னிப்பகுதிக்கு கப்பல் மூலமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் ஒருபகுதி அன்று மாலையே இறக்கி கரை சேர்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள உணவுப் பொருட்கள் இறக்கப்படாமலே அந்த கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைக்கு திரும்பியது.

அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்தியதாகவும், அதனாலேயே அந்த கப்பல் உணவுப்பொருட்களை தரையில் இறக்காமல் திருகோணமலைக்கு திரும்பியதாகவும் இலங்கை இராணுவத்தின் இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

அதேசமயம் இது குறித்து பேசிய விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுமாத்தளன் பகுதியில் பணிபுரியும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசு அதிபர் கே.பார்த்திபன் அவர்கள், அந்த பகுதியில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகவே அந்த கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள் இறக்கமுடியாத சூழல் உருவானதாகத் தெரிவித்தார்.

எனினும் கப்பல் போக்குவரத்திற்குப் பொறுப்பாகவுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், முல்லைத்தீவுக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் கொடி பறக்க விடப்பட்ட கப்பலுக்கு அருகாமையில் ஷெல்கள் வந்து வீழ்ந்தன. ஆனால் கப்பல் மீது அவை விழ வில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஷாபியா றொமானென்ஸ் தெரிவித்திருக்கிறார்.

பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தபோது காலநிலை மோசமடைந்துகொண்டிருந்ததால் கப்பலை துறைமுகத்துக்குத் திரும்பி வருமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர்.

சரக்குக் கப்பல் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதை நாம் நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

கப்பல் தரித்து நின்ற பகுதி ஒரு மோதல் பிரதேசம். எனவே அப் பகுதியின் எல்லாப் பக்கங்களிலும் ஷெல்கள் வந்து வீழ்ந்தன.

அதனால் ஷெல் வீச்சை யார் நடத்தினார்கள் என்பதை எங்களால் இனங்காண முடியவில்லை. இவ்வாறு ஷோபியா றொமானென்ஸ் மேலும் கூறினார்.

குறிப்பிட்ட கப்பலிலிருந்து 142 மெற்றிக் தொன் உணவுப் பொருள்கள் மட்டுமே இறக்கப்பட்ட நிலையில் கப்பல் திருகோணமலைக்கு திரும்பியுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.