ராமேஸ்வரம், பாம்பன் கடல் கொந்தளிப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம், பாம்பன் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலியானார். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த காற்றுவீசியதால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது.

வடகிழக்காக வீசிய வாடைக்கரை காற்றினால் வழக்கத்தை விட கடல் நீரோட்டம் வேகமாக இருந்தது. ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் மண்டபத்தில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான படகுகள், கயிற்றை அறுத்துக்கொண்டு கரையேறின. பலத்த காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலை மீன்துறை அனுமதி பெற்று 400க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க சென்றன.

நடுக்கடலில் வீசிய பலத்த காற்றினால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் நேற்று மாலையில் கரை திரும்பினர். ராமேஸ்வரம் துறைமுகத்திலும், பாம்பனிலும் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. பலத்த காற்று வீசிய போதும் பாம்பன் ரயில் பாலத்தில் வழக்கம்போல் அனைத்து ரயில்களும் வந்து சென்றன. மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என, ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று கடல் கொந்தளிப்பால், கடலில் பாசி சேகரிக்க சென்ற பாம்பன் பிரான்சிஸ் நகரைச் சேர்ந்த அந்தோணி அடுமை(49) கடலில் மூழ்கி பலியானார். நடுக்கடலில் ரோந்துப்பணியில் இருந்த இந்திய கடற்படையினர் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை கரை திரும்ப எச்சரிக்கை செய்ததாக மாலையில் ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.