கணவன், மனைவி சண்டையை விலக்கப்போனவர் பலி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் கணவன், மனைவியிடையே நடந்த சண்டையை சமாதானம் செய்யப்போனவர் கழுத்தில் காயமேற்பட்டு பலியானார். தூத்துக்குடி ராமநாடார் விளையைச் சேர்ந்தவர் மனோஜ்(29), ஷிப்பிங் கம்பெனி ஊழியர். அவரது மனைவி லாவண்யா(28), ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.


காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களிடையே நேற்று முன்தினம் சண்டை நடந்தது. அவர்களை சமாதானப்படுத்துவதற்காக குடும்ப நண்பர், முப்பிலிவெட்டி அருண்(24) சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணுக்கு கழுத்தில் பலத்த காயமேற்பட்டது.

தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அருண் சிறிது நேரத்தில் இறந்தார். மனோஜ் தலைமறைவாகிவிட்டார். அரிவாள் மனைபட்டதில் அருண் காயமடைந்து இறந்ததாக லாவண்யா தெரிவித்துள்ளார். அருண் இறந்ததை சந்தேகமரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவன், மனைவி சண்டையை தடுக்க குறுக்கே புகுந்த அருண் அரிவாள்மனையால் வெட்டப்பட்டதால் இறந்தாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தபின்னரே கொலை வழக்காக மாற்றுவது குறித்து முடிவு செய்யப்படுமென போலீசார் தெரிவித்தனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.