திறமைக் குறைவானவர்களை நீக்க டி.சி.எஸ். முடிவு

சென்னை: எதிர்பார்க்கும் தரத்தில் வேலை பார்க்காதவர்கள், திறமைக் குறைவானவர்களை பணியிலிருந்து நீக்க டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டி.சி.எஸ்.) முடிவு செய்துள்ளதாம்.

அடுத்த சில மாதங்களில் இந்த ஆள் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் அடுத்த சில மாதங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவிலான ஊழியர்கள் வேலை இழக்கப் போகின்றனர்.

இதுகுறித்து டிசிஎஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இதன் மூலம் மொத்தம் உள்ள 1.3 லட்சம் ஊழியர்களில் 1300 பேர் வேலை இழப்பார்கள் என்றார்.

உலகப் பொருளாதார உருக்குலைவை சமாளிக்க பல்வேறு ஐடி நிறுவனங்கள் தப்பிக்கும் வழிகளை தேடி வருகின்றன. ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு, சலுகை வெட்டு, நீக்கம், பணி நேரம் குறைப்பு என சகல அஸ்திரங்களையும் ஏவி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் திறைமைக் குறைவானவர்களை வேலையை விட்டு அனுப்பத் தொடங்கி விட்டது டிசிஎஸ்.

ஏற்கனவே சென்னையில் உள்ள கிளைகளில் வேலைக் குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றனவாம். சென்னையில் கடந்த 15 நாட்களில் மட்டும் 200 பேருக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனராம்.

டிசிஎஸ் தலைமை செயலதிகாரி ராமதுரை கூறுகையில், வேலைக் குறைப்புக்கு நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால் பொருளாதார தேக்க நிலை நீடித்தால் அதை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.