சர்தாரிக்கு ராணுவ தளபதி திடீர் `கெடு’-மீண்டும் ராணுவ புரட்சி?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை வரும் 16ம் தேதிக்குள் சீர்செய்ய வேண்டும் என அந் நாட்டு அதிபர் சர்தாரிக்கு ராணுவத் தளபதி கியானி திடீர் `கெடு’ விதித்துள்ளார். இதனால் அங்கு மீண்டும் ராணுவமே ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகியுள்ளது.

கியானி, பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் என்பதும், தீவிரமான முஷாரப் ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் முஷாரப் அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டு நடத்தப்பட்ட தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் மற்றும் பெனாசிர்-சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.

அதிபராக சர்தாரியும் பிரதமராக அவரது கட்சியைச் சேர்ந்த யூசுப் ராசா கிலானியும் உள்ளனர். ஆனால், ஆட்சி அமைந்தவுடனேயே நவாஸ்-சர்தாரி இடையே மோதல் மூண்டுவிட்டது.

இந் நிலையில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது சகோதரர் ஷாபாஸ் ஆகியோர் தேர்தலில் போட்டியிட அந் நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பின்னணியில் சர்தாரி இருப்பதாக நவாஸ் குற்றம் சாட்டிய நிலையில் பஞ்சாபில் முதல்வராக இருந்த அவரது தம்பி ஷாபாசின் ஆட்சி கலைக்கப்பட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது.

இதை எதிர்த்து நவாஸ் ஷெரிப் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முஷாரப் நியமித்த நீதிபதிகளை நீக்கிவிட்டு புதிய நீதிபதிகளை நியமி்க்கக் கோரி வரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவு வக்கீல்கள் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கானி்ஸ்தானை ஒட்டிய பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணங்களில் தலீபான்களின் அதிகாரம் வேகமாக பரவி வருகிறது.

அங்கு அவர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்ததிலும் சர்தாரி அரசு கையெழுத்திட்டது. இதன்படி வடமேற்கு எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தில் தலிபான்களின் வசம் ஆட்சி கைமாறியுள்ளது.

இதை இந்தியா, அமெரிக்கா உள்பட உலக நாடுகள் முழுவதும் கவலையோடு பார்த்துக் கொண்டுள்ள நிலையில் சமீபத்தில், அமெரிக்கா சென்றார் பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஷ் கியானி.

அப்போது பாகிஸ்தானின் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கவும், அரசியல் குழப்பத்தை சீர் செய்யவும் உதவுமாறு அவருக்கு அமெரிக்கா சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து நாடு திரும்பிய கியானி, ராணுவ உயர் அதிகாரிகளுடன் கடந்த 6ம் தேதி அன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம், தலிபான்கள் ஆதிக்கம் ஆகியவை குறித்து அமெரிக்கா தெரிவித்த கவலை குறித்து பேசப்பட்டது.

இந் நிலையில், பாகிஸ்தானில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுமாறு அதிபர் சர்தாரிக்கு தளபதி கியானி நேற்று திடீரென உத்தரவிட்டுள்ளார்.

வரும் 16ம் தேதி நவாஸ் ஆதரவாளர்கள் நடத்தும் போராட்டத்தை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதனால் நவாசுடன் சமாதானமாக செல்ல வேண்டிய நிலைக்கு சர்தாரி தள்ளப்பட்டுள்ளார்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சர்தாரி தவறினால் அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
அதே சமயம், ராணுவத்துடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் அவரை வைத்து சர்தாரி அரசை கியானி கவி்ழ்க்கலாம் என்ற கருத்தும் பரவியுள்ளது.

Source & Thanks : /thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.