அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் தமிழீழ தேசியக் கொடிகளுடன் ‘சுதந்திரத்துக்கான அணிவகுப்பு’

அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சுதந்திரத்துக்கான அணிவகுப்பு’ அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் எழுச்சியுடன் நேற்று நடைபெற்றது.

மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள பெடரேசன் சதுக்கத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை (07.03.09) காலை 10:30 நிமிடமளவில் தொடங்கிய இந்த அணிவகுப்பு சுவான்ஸ்டன் வீதி வழியாக நகர்ந்து விக்டோரிய மாநில நாடாளுமன்ற முன்றலை சென்றடைந்தது.

அணிவகுப்பின் தொடக்கத்தில் தாயக விடுதலைப் போரில் வித்தான மாவீரர்களுக்கும் இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் உறவுகளுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இன்று தாயக உறவுகள் அனுபவிக்கும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் விளக்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

குறிப்பாக, அவுஸ்ரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் சார்பில் மருத்துவர் சிவேன் உரை நிகழ்த்தினார்.

அணிவகுப்பின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்ப்பாட்டமான தாள வாத்தியங்களோடு சங்கொலி முழங்க உணர்வுபூர்வமான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

“சிறிலங்கா படுகொலையை நிறுத்து”

“அவுஸ்ரேலியாவே தமிழர்களை காப்பாற்று”

“அனைத்துலகமே உன் இதயத்தை திற”

“அனைத்துலகமே உன் கண்களை திற”

“எங்கள் நிலமே எமக்கு வேண்டும்”

“தமிழீழமே எமக்கு வேண்டும்”

“எங்கள் தலைவன் பிரபாகரன்”

போன்ற முழக்கங்களுடன் பறை முழக்கம், சவப்பெட்டிகள், பாடையில் படுத்தி வைக்கப்பட்ட உயிரற்ற உடலங்கள், காயப்பட்டு அவயவங்களை இழந்த சின்னக் குழந்தைகள், முதியவர்கள் என தாயகத்தின் பேரவல நிகழ்வுகள் தெருவழி ஆற்றுகை மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.

அக்காட்சிகளின் விபரணங்களாவன:

– பாதுகாப்பு வலயம் என்ற பதாகையின் கீழ் வந்தவர்கள் காயமடைந்தவர்கள் போல சிவப்பு நிறத்துணிகளை உடலில் கட்டியும் சவப்பெட்டிகளுடனும் தடிகளில் கட்டப்பட்ட துணிகளில் இறந்தவர்களின் உடலங்களை சுமந்து செல்வது.

– முட்கம்பி வேலியால் சுற்றிவளைக்கப்பட்ட வதை முகாமுக்குள் தமிழ்ச் சகோதரி ஒருத்தியை சிறிலங்கா இராணுவ காடையர்கள் துகிலுரிவது போன்ற ஆற்றுகையும், அதனுள்ளே இன்னுமொரு காயப்பட்ட தமிழ்ச் சகோதரியும் சகோதரனும் சித்திரவதைக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுவது.

– “கட்டாய கருக்கலைப்பு” என்ற பதாகையோடு சிறிலங்கா பேரினவாதம் என்ற அரக்கன் ஒருவன், நிறை மாத கர்ப்பிணியான இரண்டு சகோதரிகளை கழுத்தில் கயிறு கட்டி கட்டாயமாக கதறக்கதற இழுத்துச் சென்றது.

– சா வீட்டு பறை முழங்க சவப்பெட்டிகளுக்கு முன் பல சகோதரிகள் உண்மையாகவே ஒப்பாரி வைத்து அழுதது.

– ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் இவற்றை எல்லாம் “அனைத்துலக சமூகம்” என்ற பதாகைக்கு கீழே வெள்ளை முகமூடி அணிந்து, வாய் பொத்தி இந்தக் கொடூரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது.

இப்படி பல காட்சிகள் தெருவழி ஆற்றுகைகளாக அணிவகுப்பில் நடைபெற்றன.

இவற்றை தமிழின உணர்வாளர், நாட்டுக்கூத்து கலைஞர் இளைய பத்மநாதன் இளையோரின் உதவியோடு நெறிப்படுத்தியிருந்தார்.

இந்த தெருவழி ஆற்றுகைகளுக்குப் பின்னால் “எங்களின் தீர்வு தமிழீழமே” என்ற பதாகைகளுடன் தமிழீழத் தேசியக் கொடிகளை வானுயர உயர்த்திப்பிடித்தவாறு எழுச்சியோடு பலரும் அணிவகுத்து வந்தனர்.

வீதிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஒழுங்குகளை அதற்கு என ஒழுங்கு செய்யப்பட்ட இளையோரும், அவுஸ்திரேலிய காவல்துறையினரும் சேர்ந்து மிக நேர்த்தியாக செய்திருந்தனர்.

இந்த அணிவகுப்பு நிகழ்வை அவுஸ்திரேலியாவின் சமூக ஊடகமான SBS தங்களது பிரதான செய்தி அறிக்கையில் சேர்த்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இது அவுஸ்திரேலிய ஊடகங்களின் கடைப்பிடித்து வந்த கடந்த கால போக்கில் ஏற்பட்ட மாற்றமாக கருதப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.