‘தமிழர்களின் காவலர்’ என தன்னை அழைத்துக்கொள்ளும் கருணாநிதி ஈழத் தமிழர்களை காக்கத் தவறிவிட்டார்: ஜெயலலிதா கடும் குற்றச்சாட்டு

‘தமிழர்களின் காவலர்’ என தன்னை அழைததுக்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஈழத் தமிழர்களை காக்கத் தவறிவிட்டார் என்று அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (08.03.09) ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா இராணுவத்திற்கு ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசாங்கம் அனுப்பியதை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.  ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை காங்கிரஸ் தலைமையிலான, தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறுக்கவில்லை.

பின்னர், இந்திய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும், பாரதப் பிரதமருக்கு மிக நெருக்கமானவர்களும் இலங்கைக்கு சென்று வந்த தகவலையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின. இந்தச் செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை.  தி.மு.க.வும் இது குறித்து எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை.

இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கும் கருணாநிதியும் இதை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அமைச்சர்கள் பதவி விலகவுமில்லை; பதவி விலகப் போவதாக மத்திய அரசை மிரட்டிக் கூட பார்க்கவில்லை.

இந்தக் கேள்விகளை எல்லாம் நான் வினவிய போது, இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகிறது என்பதும், இது குறித்து மத்திய அரசு மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை என்பதும் கூட எனக்குத் தெரியவில்லை என்று என்னை கேலி செய்தவர் தான் சிறுபான்மை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

இருப்பினும், அதே கருணாநிதி இப்போது, இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக மூன்று தீர்மானங்களை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்! இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து கருணாநிதி கவலைப்படுவதாக தெரியவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டும் போது, “இது மத்திய அரசின் பொறுப்பு” என்றும், “மாநில அரசிற்கு எந்தவிதமான பங்கும் இல்லை” என்றும் தெரிவிக்கிறார்.

ஆனால், இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்று விரும்பும் போது, இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு கொண்டு வருகிறார் கருணாநிதி. கருணாநிதியின் செயல், தப்பித்து ஓடும் முயலுடன் சேர்ந்து தானும் ஓடி, அதே சமயத்தில் அதனை வேட்டையாடி துரத்துகின்ற நாய்களுடன் தானும் சேர்ந்துகொண்டு வேட்டையாடுவது போலவும் உள்ளது.

அதே நேரத்தில், தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற ஒரு கட்சி என்பதை மிகவும் சாமர்த்தியமாக விட்டுவிட்டு மறைக்கப் பார்க்கிறார் கருணாநிதி.

சென்ற வருடம் ஒரு மாத கால இரகசிய பயிற்சியை நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவ வீரர்கள் அரியானா மாநிலத்தில் மேற்கொண்டார்கள்! பயிற்சியை முடித்த சில சிறிலங்கா இராணுவ வீரர்களின் பேச்சுக்கள் அடங்கிய  தொகுப்பு உட்பட இந்தப் பயிற்சி குறித்து ‘ஜெயா’ தொலைக்காட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இது எனக்கு தெரிந்து உடன், நான் இதை எதிர்த்து குரல் கொடுத்தேன். ஆனால் கருணாநிதியிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ எந்த எதிர்ப்பும் வரவில்லை.  இந்தப் பயிற்சி அதிநவீன மற்றும் தலைசிறந்த சாதனங்களை பெற்றுள்ள இந்திய இராணுவத்தால் அளிக்கப்பட்டது.

இந்திய அரசின் முழு ஒப்புதலோடு தான் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது என்பது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வேறுவிதமாக சொல்ல வேண்டுமென்றால், இலங்கையில் நடத்தப்படும் இனவெறி தாக்குதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமல்லாமல், முழு ஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும், எங்களைப் பொறுத்த வரையிலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்றால், “காங்கிரஸ் மற்றும் தி.மு.க.” என்றுதான் அர்த்தம்.  எங்களைப் பொறுத்த வரையில், தி.மு.க. என்றால் கருணாநிதி.  இலங்கைத் தமிழர்களின் படுகொலைக்கு கருணாநிதியும் ஒரு முக்கியக் காரணம்.

இந்தப் படுகொலையில் முக்கியப் பங்காற்றிவிட்டு, இந்தப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றுகிறார் சிறுபான்மை தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி!  யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் கருணாநிதி? இந்த மூன்று தீர்மானங்களில் கடைசி தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார் கருணாநிதி.

இது போன்ற பித்தலாட்ட பாசாங்கு தீர்மானங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரவு தர வேண்டும்? மக்களை ஏமாற்றுவதற்காகவே நடத்தப்படும் கண்துடைப்பு நாடகத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரவு தர வேண்டும்?

ஒரு நாட்டிற்கு மற்றொரு நாடு ஆயுதங்களை அளிப்பதும், பயிற்சி கொடுப்பதும் புதுமையானது அல்ல. ஆனால் இலங்கையை பொறுத்த வரையில், யார் தாக்கப்படுகிறார்கள்? இந்த ஆயுதங்களும், பயிற்சியும் யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன? என்பது தான் கேள்வி.

சிறிலங்கா அரசு தன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும், இராணுவ பலத்தையும் அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறது என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகள் மீது தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது என்று சிறிலங்கா அரசு கூறலாம்.

ஆனால், இறந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது மட்டும் நடத்தப்படும் தாக்குதல் அல்ல, பெரும்பாலான அப்பாவித் தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல் இது என்பது தெளிவாகிறது.

இதில் உள்ள முக்கியமான சாராம்சம் என்னவென்றால், இந்திய ஆயுதங்களும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும். அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இன்று பயன்படுத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், சிறிலங்கா கடற்படை, கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களையும் சுட்டு வீழ்த்துகிறது.

அண்மையில், இந்தியாவிற்கு சொந்தமாக இருந்து, பின் கருணாநிதியின் ஆசீர்வாதத்துடன் முந்தைய காங்கிரஸ் மத்திய அரசால் சிறிலங்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவில் இந்திய மீனவரை சிறிலங்கா கடற்படை சுட்டுக்கொன்றது. விதியின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது!

தொடர்ந்து, இந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுவந்த போதிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தக் கொடுமைகளை எல்லாம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்களை அனுப்பியும், நவீன சாதனங்களை அளித்தும், சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தும், சிறிலங்கா அரசுடன் ஒத்துழைக்கும் ஒரு அரசாக இருந்துள்ளது.

சக்தி வாய்ந்த இலாக்காக்களை தங்கள் வசம் வைத்துள்ள 10 “கனம் பொருந்திய” தமிழர்கள், இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசில் தி.மு.க. மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

தி.மு.க. தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால், மத்திய அரசு கவிழ்ந்திருக்கும். தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வளமான இலாக்காக்களை பெறுவதற்காக “ஆதரவு வாபஸ்” என்ற ஆயுதத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டவர் தான் கருணாநிதி.

ஆனால், “தமிழர்களின் காவலர்” என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி, தமிழர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் நலன் என்று வரும் போது. வாய்மூடி மௌனியாக காட்சி அளிப்பார் என்பதை அனைவரும் அறிவர்.

மக்களைப் பற்றிய அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். விடம் போல் ஏறும் விலைவாசியை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. சட்டத்தின் ஆட்சியை தமிழ்நாட்டில் நிலைநாட்ட எந்தவித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களும், தி.மு.க.வினரும் தமிழ்நாட்டில் சட்டத்தை சீர்குலைக்கும் வன்முறையாளர்களாக உருவாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் என்பது மாபெரும் கேலிக்கூத்தாகிவிட்டது. தி.மு.க.வினர்.

அப்பாவி பொதுமக்களின் மீது ரவுடிகளையும், குண்டர்களையும் ஏவி விட்டு தாக்குதல் நடத்துவதும், காவல்துறையினர் மேலிடத்து நிர்ப்பந்தம் காரணமாக வன்முறைகளை கைகட்டி வேடிக்கை பார்ப்பதும் தான் வாடிக்கையான நடைமுறை ஆகிவிட்டன.

கருணாநிதி குடும்பத்தினரின் எதேச்சாதிகாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. தமிழ்நாடு என்ற மாநிலமே கருணாநிதி குடும்பத்தினரின் தனி இராஜ்ஜியம் போல் ஆகிவிட்டது. குடும்பத்தினர் ஒவ்வொருவரும், குறுநில மன்னர்கள் போல் நடந்துகொள்கின்றனர்.

கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அதிகார பூர்வமாகவே “காத்திருக்கும் முதலமைச்சர்” என்று அழைக்கப்படுகிறார். கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி ஏற்கெனவே தனக்குத் தானே “தென் தமிழகத்தின் முதலமைச்சராக” முடிசூட்டுக் கொண்டு விட்டார்.

அழகிரியின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கருணாநிதியோ, மாநில அரசு அதிகாரிகளோ  எதையும் செய்ய முடியாது. கருணாநிதியின் மூன்றாவது மனைவியாகிய துணைவிக்கு பிறந்த மகள் கனிமொழி டெல்லிக்கு கருணாநிதியால் அவரது தூதுவராக நியமிக்கப்பட்டவர்.

மாநிலத்தின் வளங்களை கொள்ளையடிப்பதில் இதர மகன்களும், மகள்களும், பேரன்களும், பேத்திகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தனை முக்கியமான காரியங்களுக்கெல்லாம் தலைமை தாங்க வேண்டியுள்ள கருணாநிதியிடமிருந்து, இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கோ அல்லது வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கோ எதுவும் செய்வார் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

தனது குடும்ப உறுப்பினர்களுக்காகவோ அல்லது தி.மு.க. அனுதாபிகளுக்காகவோ டெல்லியில் வளமான பதவிகளை பெறவேண்டும் என்றால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தவும், மத்திய அரசை பயமுறுத்தவும் கருணாநிதி தயங்கமாட்டார் என்றும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை என்றால் சென்னையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கைகள் விடுவதோடு நிறுத்திக் கொள்வார் என்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.

‘தமிழர்களின் காவலர்’ என்ற கருணாநிதியின் முகத்திரையை என்னுடைய அறிக்கைகள் கிழித்தவுடன், அதிலிருந்து நழுவி வெளிவருவதற்காக, இலங்கைத் தமிழர்கள் குறித்த கொள்கையில் நான் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதாக என்மீது குற்றம் சாட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாட்டை அனைவரும் அறிவர். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சிறிலங்கா அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுயநிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான, ஏற்கெனவே திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தான் நாங்கள் எதிர்க்கிறோம்.  இந்த ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இவை இரண்டையும் ஒன்று சேர்த்து இந்தப் பிரச்சினையை குழப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி.

தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையிலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கியமான கட்சியின் தலைவர் என்ற முறையிலும், பாரதப் பிரதமர், சிறிலங்கா அரச தலைவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அங்கு தமிழர்களின் மீது நடத்தப்படும் இனப் படுகொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பேச வேண்டும் என்று, பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்பி பாரதப் பிரதமரை வற்புறுத்த வேண்டும் என்ற மிக  அற்புதமான, அதிமேதாவித்தனமான எண்ணத்தை வெளிப்படுத்தினார் கருணாநிதி!

கருணாநிதியின் அறிவுரையை மக்கள் ஏற்கவுமில்லை, அதைப் பின்பற்றவுமில்லை என்பதை உணர்ந்த கருணாநிதி, பாரதப் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத் தயார் என்று அறிவித்தார். தன்னுடைய அன்பு மகள் உட்பட அனைத்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் பதவி விலகல் கடிதங்களை தானே பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார் கருணாநிதி.

ஆனால், நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த பதவி விலகல் கடிதங்களை தானே கிழித்து போட்டுவிட்டார் கருணாநிதி.

2004 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி நேரில் டெல்லி சென்று, டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்படும் வரை, அமைச்சர் பதவி கிடைத்த ஏழு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய அமைச்சர் பொறுப்புகளை ஏற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.

கப்பல்துறை பணம் ஈட்டுவதற்கு ஒரு முக்கிய துறையாக இருப்பதனால், கருணாநிதிக்கு அந்த இலாகா இன்றியமையாத ஒன்றாகத் தேவைப்பட்டது.

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் திரு. கே. சந்திரகேசகர் ராவ் வினோதமாக தானாகவே முன்வந்து டி.ஆர். பாலுவுக்கு அந்த இலாகாவை விட்டுக் கொடுத்ததினால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே கவிழாமல் காப்பாற்றப்பட்டது.

தன் சுயநலத்திற்காக என்றால், கருணாநிதியினால் இதை செய்ய முடியும். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சனை என்றால், பொது மேடைகளிலிருந்து புனிதரைப் போல் ஞானப் பாடம் நடத்தும் தொனியில் முழங்குவார்; மக்களை தந்தி அனுப்ப ஆணையிடுவார்! அல்லது மாநில சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றுவார். இது மட்டும்தான் அவருக்கு தமிழ் மக்களின் மேல் இருக்கும் பற்றும், அக்கறையும்!.

தி.மு.க. தலைமையின் தூண்டுதலால் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, திரைப்பட இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர், இந்திய நாட்டிற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த இரு இயக்குனர்களும் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னையில் தொடக்கப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்.

சுருங்கச் சொல்லப்போனால் எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவை யாவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான். பின்னர், இந்த இரு இயக்குனர்களும் விடுவிக்கப்பட்ட பிறகு, சீமான் மீண்டும் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சீமான் கூறிய அனைத்தையும், கருணாநிதியும் மொழிந்திருக்கிறார். சீமான் என்னென்ன பேசினாரோ, அவற்றை எல்லாம் கருணாநிதியும் கூறியிருக்கிறார். ஆனால், சீமான் சிறையில் இருக்கிறார். கருணாநிதியோ, தலைமைப் பீடத்தில் முதலமைச்சராக உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறார்.

என்ன வயிற்றெரிச்சல்! என்ன வினோதம்! கருணாநிதி மேல் யாராவது நம்பிக்கை வைத்தால், இது தான் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனையாகும்.

இலங்கையில் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சண்டையில், ஒன்றும் அறியாத அப்பாவி  தமிழ் மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். அவர்கள் வீடு இன்றி அகதிகளாக தங்களுடைய நாட்டிலேயே அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உணவு, உடை, மருந்து எதுவுமின்றி, தங்க வசதியுமின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அவல  சூழ்நிலைக்கு பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பலமாதங்களாக நிலவுகின்ற சூழ்நிலை இது தான். இப்படி அல்லல்படும் மக்களுக்கு, தந்தி மூலமாகவோ, அல்லது இந்திய தூதரகத்தின் கீழ்மட்ட அதிகாரியை கடிந்து கொள்வதின் மூலமாகவோ, ஆயிரக்கணக்கில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவித நிவர்த்தியும்  கிடைக்காது.

இப்படி துன்பத்தில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில், இந்தியாவில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ, அல்லது மாநிலத்தில் ஆட்சி செய்பவர்களுக்கோ எள்ளளவாவது அக்கறை இருக்க வேண்டாமா?

இலங்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்திய அரசு உணவு, உடை மற்றும் மருந்துககளை ஏன் அனுப்பவில்லை? மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று நான் சுட்டிக்காட்டுகிறேன்.

இந்த காரணத்தினால் தான்,  மன்மோகன் சிங்கின் மத்திய அரசும், கருணாநிதியின் மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை என்று நான் கூறுகிறேன்.

இன்று நாம் உண்ணாநிலை இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாநிலை அறப் போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ் நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும்; இதுபோன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கின்ற விதம், தமிழக மக்களை வருத்தம் அடைய வைத்திருக்கிறது என்பதையும்; தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும், இலங்கைத் தமிழர்களின் நிவாரணத்திற்காக நான் நிதி வசூல் செய்ய உத்தேசித்துள்ளேன். உண்ணாநிலை அறப் போராட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைவரும் தாராளமாக நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.