வடக்கை முழுமையாக கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வை முன்வைக்க அரசு தயார்: வெளியுறவு அமைச்சர் போகொல்லாகம

வடக்கை முழுமையாக கைப்பற்றியவுடன் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சில தமிழ் கட்சிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச சமூகமும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சருடனான உரையாடல் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் தெரிவித்ததாவது:-

சிவில் மக்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருவதற்காக புதிதாக இரண்டு பாதுகாப்பு பாதைகளை அறிவித்துள்ளோம். பாதுகாப்பு பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அம்மக்களை விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. இவை தொடர்பாக நான் ரிச்சர்ட் பௌச்சருக்கு விளக்கிக் கூறினேன்.

நாம் சர்வதேச சமூகத்துக்கு எமது நிலைப்பாட்டை அறிவித்துவருகின்றோம். எமது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுவருகின்றது. வடக்கு மீட்கப்பட்டதுடன் அரசியல் தீர்வை முன்வைக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது. அது தொடர்பில் நாங்கள் சில தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம்.

விரைவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஜனாதிபதி  பேச்சுவார்த்தை நடத்துவார். கூட்டமைப்பு தமிழ் மக்களின் நலன்கருதி அரசியல் தீர்வை முன்வைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.