கச்சதீவு அந்தோனியார் திருநாள் ரத்து: தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம்

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தடை விதித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ச அரசுக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் கோவிலில் ஆண்டுதோறும், மார்ச் மாதம் திருவிழா நடைபெறும். நேற்று தொடங்குவதாக இருந்த இந்த திருவிழா திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண கிருத்துவ பேராயர் அறித்துள்ளார்.

விழாவுக்கு அனுமதி கொடுக்க இலங்கை இராணுவத்தினர் மறுத்ததால், இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ராஜபக்ச அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக கிருத்துவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிவகங்கை மாவட்ட முதன்மை குரு அமல்ராஜ், இலங்கை மக்களும், தமிழர்களும் சேர்ந்து கொண்டாடும் இந்த திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. திருவிழா மீண்டும் நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கச்சதீவு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக இருந்து வருகிறது: வைகோ

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோனியார் கோவில் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க  இலங்கை அரசு கட்டுப்பாடுகளை விதித்து வரும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பாராமுகமாக இருந்து வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கச்சதீவில் உள்ள அந்தோனியார் கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழாவும், திருப்பலியும் நடக்கும். இதுதொடர்ந்து பாரம் பரியமாக இராமநாதபுரம், இராமேஸ்வரம் மீனவர்கள் கச்சதீவுக்கு சென்று அந்தோனியார் திருவிழாவில் பங்கேற்பார்கள்.

கச்சதீவு உடன்படிக்கையிலும் தமிழக மீனவர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க உரிமையும் இருக்கிறது. இச்சூழலில் திடீரென்று இலங்கை அரசு தமிழகத்தில் இருந்து ஐம்பது பேர் மட்டுமே கச்சதீவுக்குச் செல்லமுடியும் என்ற கட்டுப்பாட்டை விதித்து இருக்கிறது.

இதனால் அப்பகுதி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் வேதனையும், மனக்கொதிப்பும் ஏற்பட்டு உள்ளது. அம்மக்களின் உணர்வுகளை இலங்கை அரசு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அலட்சியப் படுத்துகிறது. எனவே, இந்த ஆண்டும் அம்மீனவ மக்கள் யாரும் கச்சதீவுக்கு செல்வதில்லை என முடிவெடுத்து உள்ளனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பாராமுகமாக தொடர்ந்து இருக்கின்றது. சிவகங்கை மறை மாவட்டத் தலைமைக் குரு அமல்ராஜ் அடிகளாரும் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.   ஏற்கனவே மீனவர்கள் இலங்கை கப்பற்படையினரால் நித்தம் நித்தமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வேதனையோடு வாழுகின்ற மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்களுடைய குறைகளைச் சொல்லி ஜெபிக்கக்கூட அனுமதி இல்லாமல் இலங்கை அரசு செய்துவிட்டது. இது கடுமையான கண்டனத்திற்குரியது.

இன்றைக்கு தமிழக முதலமைச்சர் இவ்வளவு பெரிய சிக்கலைப்பற்றிப் பேசாமல், தமிழகத்தின் உயிர் ஆதாரமான பிரச்சனைகளில் அனைத்திலும் தன் கடமையைச் செய்யாமல் வெற்று அறிக்கைகளை பக்கம் பக்கமாக வெளியிட்டுக் கொண்டு இருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தப் பிரச்சினையிலும் கடமை தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டுகிறேன்.

கிறிஸ்தவ மக்களின் கச்சதீவு செல்கின்ற உரிமையை நிலை நாட்டும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.