இலங்கை பிரச்சினையில் மெத்தனமாக செயற்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தமிழகத்தில் சி.டி.பிரசாரம்

இலங்கைத் தமிழர் மீதான தாக்குதலை தடுக்க தவறி மெத்தனமாக செயல்பட்டதால் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி நெஞ்சை உருக்கும் வலுவான காட்சிகள்,  புகைப்படங்கள், வசனங்களுடன் கூடிய சி.டி.க்கள் மூலம் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரசாரம் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் நலனை காங்கிரஸ் கூட்டணி அரசு பாதுகாக்க தவறியதாகவும் இதற்காக வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி டி.வி.டி.க்கள், சி.டி.க்கள் மூலம் ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் நூதன பிரசாரம் செய்து வருகின்றன.

“இனி என்ன செய்ய போகிறோம்?” என்ற தலைப்பில் 13 நிமிடம் ஓடும் அளவிற்கு உருவாக்கபட்டுள்ள இந்த சி.டி.யில் அப்பாவி தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் கொடூர தாக்குதல்கள், பாலியல் கொடுமைகள் தமிழர்கள் படும் துயரங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் அழுகுரல், கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் பிணக்குவியல்கள் என நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

சிங்கள விமான படையினர் பள்ளிக் கூடங்களின் மேல் ஈவு இரக்கமற்று குண்டு மழை பொழிவதையும், மாணவர்களும் அப்பாவி மக்களும் பதுங்கு குழிகளை தேடிச்சென்று உயிர் பிழைக்க ஓடுவதும், தாக்குதலுக்கு இலக்காகி சொந்த நாட்டை விட்டு அண்டை நாட்டுக்கு விரக்தியுடன் செல்லும் மக்களின் புலம்பல் என நெஞ்சையும் ரணமாக்கும் காட்சிகளுக்கு இடையே புகைப்படங்கள், உணர்ச்சி மிக்க வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த கோரி இந்தியஅரசையும் தமிழக அரசையும் வலியுறுத்தி இலங்கையிலும் தமிழகத்திலும் பொது மக்களும் , மாணவர்களும் நடத்திய போராட்ட காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட தீக்குளித்து இறந்த முத்துகுமாரின் இறுதி ஊர்வல காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சி.டி.யின் இறுதியில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்க வலியுறுத்தி உணர்ச்சி பெருக்குடன் பெண்குரல் ஓன்று ஒலிக்கிறது.

“தாய்தமிழகமே! ஆறரை கோடிதமிழர்கள் இருந்தும் தட்டிக் கேட்க நாதியற்றவர்களாய் ஈழத்தமிழனம் கூண்டோடு சிதைக்கப்படுவதைப் பார்த்தாயா? உங்கள் போராட்டங்கள் செவிடன் காதில் ஊதிய சங்காய் போக சிங்களவனின் வாதத்துக்கு ஆசி வழங்கி அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் அரசு செய்து வரும் நிலையில் இனி என்ன செய்யபோகிறோம்?

வாக்கு சீட்டு எனும் வரலாற்றை திரும்பும் ஒற்றைப் போராயுதம் உள்ளது என்று கூறி காங்கிரஸ் கட்சியையும் அதனுடன் கூட்டு சேரும் கட்சிகளையும் குற்றஞ்சாட்டும் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

சென்னை, கோவை ,திருப்பூர்,ஈரோடு, நெல்லை, திருச்சி, விழுப்புரம் பகுதிகளில் அதிக அளவில் இவை வினியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த சி.டி.க்கள் மூலம் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு வேட்டு வைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சி.டி.யை வினியோகிக்கும் நபர்களை உளவுத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.