பாதுகாப்பு கூட்டம் இழுத்தடித்த எதியூரப்பா – கடுப்பில் ரத்து செய்த ப.சிதம்பரம்

பெங்களூர்: பெங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு வராமல் முதல்வர் எதியூரப்பா இழுத்தடித்ததால் கடுப்பான மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அக்கூட்டத்தை ரத்து செய்தார். ஆனால், ரத்தானதற்கு நான்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை மத்திய உள்துறை ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டம் மார்ச் 4ம் தேதி நடப்பதாக இருந்தது.

ஆனால் அந்த தேதியில் எதியூரப்பாவுக்கு வேறு பணிகள் இருப்பதால் வேறு தேதியில் கூட்டம் நடத்துமாறு கர்நாடக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மார்ச் 5-ந்தேதி கூட்டம் நடத்தலாமா என மத்திய உள்துறை கேட்டபோது அந்த தேதியும் முதல்வருக்கு வசதிப்படாது என்று கூறப்பட்டதால் அந்த கூட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 7ம் தேதி (இன்று) நடத்தலாம் என கர்நாடக அரசே உள்துறைக்குத் தெரிவித்தது. இதை ப.சிதம்பரம் ஏற்று இன்று பெங்களூர் வருவதற்காக நேற்று டெல்லியிலிருந்து கிளம்பி மும்பை வந்தார்.

பெங்களூர் புறப்பட தயாராக இருந்தபோது, எதியூரப்பா தனது தொகுதிக்கு செல்ல இருப்பதால் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ப.சிதம்பரம் தனது பெங்களூர் பயணத்தை ரத்து செய்தார். மேலும் கர்நாடக அரசின் இழுத்தடிப்புக்கு கண்டனமும் தெரிவித்தார்.

மேலும் உள்துறையின் கூட்டத்திற்கு கர்நாடக அரசு எந்த அளவுக்கு இழுத்தடிப்பு செய்தது என்பதையும் அந்தத் துறை விரிவான அறிக்கையாக வெளியிட்டது.

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்திற்கு எதியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கூட்டம் ரத்தானதற்கு நான் காரணம் இல்லை. ப.சிதம்பரம்தான் கூட்டத்தை ரத்து செய்தார்.

3 முறை கூட்டம் ரத்தாக சிதம்பரமே காரணம். மேலும், இந்தக் கூட்டத்தில் நான் இருக்க வேண்டிய அவசியமே இல்லை. எனக்குப் பதில் உள்துறை அமைச்சர் ஆச்சார்யா பங்கேற்பார் எனவும் நான் அறிவித்திருந்தேன்.

உண்மையிலேயே கர்நாடகத்தின் பாதுகாப்பு குறித்து ப.சிதம்பரத்திற்கு அக்கறை இருக்குமானால், முதலி்ல கர்நாடகத்திற்கு என்.எஸ்.ஜி. கமாண்டோப் படையை அவர் ஒதுக்கியிருக்க வேண்டும். பிறகு பெங்களூர் வரட்டும் அவர் என்றார் எதியூரப்பா.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.