யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் மீது இராணுவம் அடாவடித்தனம்: தடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் கஜேந்திரன் வேண்டுகோள்

யாழ்பல்கலைக்கழக சமூகத்தினர் மீதான ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அடாவடித் தனங்களை தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த இரண்டு மாதங்களில் 2000 திற்கும் அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 5000 திற்கும் அதிகமான பொது மக்கள் படுகாயமடைந்தும் உள்ளனர். எஞ்சியுள்ளவர்களுக்கான உணவு மருந்து உட்பட்ட அத்தியாவசிய பொருட்கள் எதனையும் அனுப்பாது அரசு தடை செய்துள்ளது.

போரில் வெற்றி காண்பதற்காக உணவையும் மருந்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தி மக்களை வன்னியில் இருந்து பலவந்தமாக வெளியேற்ற முயற்சிக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் வன்னியில் இருந்து சென்று யாழ் பல்கலைக்கழகத்திலும் ஏனைய பல்கலைக்கழகங்களிலும் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிலும் கல்வி பயிலும் மாணவர்கள் பலரது பெற்றோர்கள், உடன் பிறப்புக்கள், உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவானோரின் உறவினர்கள் படுகாயமடைந்தும் உள்ளனர்.

இவ்வாறு கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் தமது பெற்றோர்களுடனான தொடர்புகளை இழந்து பெற்றோர்கள் உடன்பிறப்புக்கள், உறவினர்கள் உயிரோடு இருக்கிறார்களா அல்லது கொல்லப்பட்டுள்ளார்களா காயமடைந்துள்ளார்களா? உயிரோடு இருப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் தெரியாது தவித்துப்போய் உள்ளனர்.

தமது கல்வியையும் தொடர முடியாத நிலையில் பெற்றோர்களிடமும் சென்று சேர முடியாத நிலையிலுள்ளனர். இந் நிலையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் ஒன்றிணைந்து வன்னியில் இடம்பெறும் போரை நிறுத்தி பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் மௌனப் பிரார்த்தனையை நடாத்தி வருகின்றனர்.

இவ்வாறு பல்கலைக்கழக சமூகத்தினர் நடாத்தும் போராட்டமானது, அரசு மேற்கொள்ளும் இன அழிப்பு யுத்தத்தினை நிறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையை சர்வதேச சமூகத்தினர் மத்தியில் வலுப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தினை ஸ்ரீலங்கா படைகளுக்கும் அரசுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தினை கண்டு மிரண்டு போயுள்ள யாழ் படைத்தலைமை தனது இராணுவ இயந்திரத்தினை பயன்படுத்தி மாணவர்களின் ஐனநாயக வழிப் பேராட்டத்தினை நசுக்க முயல்கின்றது. அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே கடந்த சில நாட்களாக யாழ் பல்கலைக்கழக சுற்றாடலில் பெருமளவு இராணுவத்தினரை குவித்து மாணவர்கள் மீது பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருகின்றது.

மாணவர்களின் ஐனநாயக சுதந்திரத்தினை நசுக்கும் வகையில் படையினரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் இலங்கை அரசு மாணவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து உடனடியாக போரை நிறுத்த பேச்சுக்களை ஆரம்பிக்க முன்வர வேண்டும் எனவும் கோருகின்றேன்.

ஐனநாயக வழி முறையில் மாணவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்தினை நசுக்க சிங்களப்படைகள் மேற்கொண்டுவரும் அடாவடித்தனங்களை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் வாழும் மக்களும் மாணவர்களும் தமது விருப்பங்களை வெளிபடுத்த முடியாதளவுக்கு கடுமையான அடக்கு முறைகளை சிங்கள அரசும் படைகளும் மேற்கொண்டு வருகின்றது.

இந் நிலையில் அப்பகுதிகளில் வாழும் மக்கள் எதை விரும்பகின்றனர் என்பனை அறிந்து கொள்வதற்காக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் அங்கு சென்று நிலைமைகளை நேரில் கேட்டு அறிந்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

செல்வராசா கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.