வன்னி மக்களின் படுகொலையை கண்டித்து நோர்வேயில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

வன்னி மக்களை தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி படையினரது கட்டுப்பாட்டில் முகாம்களில் அடைத்து வைப்பதைக் கண்டித்து, நோர்வேயில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டம் வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணிவரை நடைபெற்றது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் மத்திய தொடரூந்து நிலையத்தில் இருந்து தேசிய திரையரங்கு வரை கார்ல் ஜொஹான்ஸ் வீதியின் (Karl Johans Street) இரு மருங்கிலும் தமிழர்கள் பல நூற்றுக்கணக்கில் கைகோர்த்து நின்று வன்னி மக்களை வெளியேற்றும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், மூதாளர்கள் என கடும் குளிரின் மத்தியிலும் முழக்கங்களை எழுப்பி, பதாகைகளைத் தாங்கியிருந்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

சிங்கள பெளத்த இனவாத அரசு எறிகணைகள், மற்றும் வான் தாக்குதலால் மட்டுமன்றி உணவையும், மருந்தையும் ஆயுதமாகப் பயன்படுத்தியும் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன், நோர்வே உட்பட அனைத்துலக நாடுகள் வன்னிக்கு சிறீலங்கா அரசு உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் அனுப்பி வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் நோர்வே வாழ் தமிழ் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.