இலங்கை இராணுவத்தை ஆதரித்தவர் உண்ணாவிரதம் இருப்பதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்

இலங்கை இராணுவத்தை ஆதரித்தவர் உண்ணாவிரதம் இருப்பதா? இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

கடிதத்தின் விவரம் வருமாறு:-

இலங்கையில் போர் நிறுத்தம்கோரி அ.தி.மு.க. மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தக் கட்சியின் தலைவி சென்னையிலே அவரே தலைமை வகிக்கப்போவதாகவும் ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது அனைவரும் வரவேற்கக் கூடிய செய்தியாகும்.

சிங்கள அரசும், சிங்கள இராணுவமும் இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்களை அன்றாடம் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தி வருகிறது. இதனால் தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள பதட்ட நிலை குறித்தும், எஞ்சியுள்ள தமிழர்களைக் காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்க என்று கேட்டிருக்கிறீர்கள். இதற்கு முதல்-அமைச்சர் பதில் அளிப்பார்.

இந்தப் பிரச்சினையிலே விவாதிப்பதற்கு ஏதுமில்லை. அரசின் நிலையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது குறித்து இலங்கை வாழ் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்புக் கொடுப்பது பற்றி இந்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.இது குறித்து தமிழக அரசும் இந்திய அரசுடன் தொடர்பு கொள்ளும்.

உடன்பிறப்பே, இலங்கையில் உள்ள அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்று வதற்காக அ.தி.மு.க. ஆட்சியிலே எடுக்கப்பட்ட நிலை இதுவாகத்தான் இருந்தது. ஆனால் 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த மூன்றாண்டு காலத்தில் மட்டும் 7.12.2006 அன்றும், 23.4.2008 அன்றும், 12.11.2008 அன்றும், 23.01.2009 அன்றும் நான்கு முறை சட்டப் பேரவையிலே இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

உடன்பிறப்பே, இவ்வாறு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி தம்பி பரிதி இளம்வழுதி ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு சென்ற போது, அவரை அங்கே விரிவாகப் பேசுவதற்குக் கூட அனுமதிக்காமல், அவருடைய தீர்மானத்தைப் பேரவைத் தலைவரே படித்து, முதல்-அமைச்சர் இரண்டே வரிகளில் இந்தியஅரசு தான் ஏற்பாடு செய்யும், அதை மாநில அரசு வலியுறுத்தும் என்பதோடு முடித்து விட்டார்கள்.

ஆனால் தற்போது 23.1.2009 அன்று இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழக அரசின் சார்பாகவே நான் தீர்மானம் கொண்டு வந்து, அதற்கு அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்ட போது – ஜெயலலிதா கட்சியின் சார்பில் பேசிய ஓ. பன்னீர் செல்வம் என்ன பேசினார்?

உண்ணா நோன்பு போல பல போராட்டங்கள் நடத்தினீர்கள், மனித சங்கிலி நடத்தினீர்கள், பிரதமரைச் சென்று சந்தித்தீர்கள், இவ்வளவு நடத்தியதற்குப் பின்னாலும், யாரை வலியுறுத்தி நடத்தினீர்கள்? மத்திய அரசில் யார், யாரெல்லாம் பொறுப்பில் இருக்கின்றீர்கள்? அந்தப் பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு மத்திய அரசு பார்த்துக் கொள்ளும், இந்தியப் பேரரசு பார்த்துக் கொள்ளும் என்று சொன்னால் அந்த மத்திய அரசில் அங்கமாக நீங்கள் ஏன் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?

அவர்களின் ஆட்சிக் காலத்திலேஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கூட அவையிலே எழுப்பி பேசுவதற்கு அனுமதி கொடுக்க மறுத்து, பேரவைத் தலைவரே அதைப் படித்து, முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அது இந்திய அரசின் பொறுப்பு, அவர்களை வலியுறுத்துவோம் என்று மட்டுமே கூறி பிரச்சினையை முடித்து விட்டவர்கள்; தற்போது நீங்கள் எப்படி மத்தியஅரசைக்காட்டி பிரச்சினையைத் தட்டிக்கழிக்கலாம், ஏன் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்மைப் பார்த்து கேட்கிறார்கள்.

கேட்பதோடு மட்டுமல்ல, அந்தத் தீர்மானத்தையே நாங்கள் நடத்தும் நாடகம் என்று கூறிவிட்டு அவையிலிருந்து வெளி நடப்பே செய்தார்கள். இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என்று கழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தைக் கூட ஆதரிக்க மறுத்து வெளிநடப்பு செய்தவர்கள்தான் வரும் 10ஆம் தேதியன்று இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறார்கள் என்றால் அதனை வரவேற்கத்தானே வேண்டும்!

அது மாத்திரமல்ல; 17.1.2009 அன்று, எம்.ஜி. ஆரின் 92வது பிறந்த நாளையொட்டி, பத்திரிகையாளர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியின் போது, இலங்கைத் தமிழர்களைக் கொல்லவேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை, எந்தப் போரின் போதும் அப்பாவிமக்கள் கொல்லப்படுவதுபோலத்தான் இலங்கையில் தற்போது நடக்கிறது. என்று இலங்கை ராணுவத்திற்கு ஆதரவாக கூறியவர் – தற்போது அந்த இலங்கை ராணுவத்தை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறார் என்றால் அது வரவேற்கத்தக்கது தானே?

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான்தான் என்று ஜெயலலிதா 22.10.2008 தேதிய அறிக்கையிலே கூறிக்கொண்டார்.

பிரபாகரனின் தலைமையில் விடுதலைப்புலிகள் சிங்கள ராணுவத்துடன் நடத்தும் போருக்கு இலங்கைத் தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. அந்தப் பிரபாகரனோடு தானும் அமர்ந்துள்ள புகைப்படத்தை ஜெயலலிதாவின் தோழமைக் கட்சியிலே உள்ள வைகோ வெளியிட்டு அதிலேயே பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

அந்த வைகோவையும் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு, ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது தானே?

2-10-2008 அன்று இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் தற்போது அ.தி. மு.க.வுடன் உறவு கொண்டுள்ள இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அதிலே கலந்து கொள்வதாக முதலில் தெரிவித்து விட்டு, பின்னர் அதிலே கலந்து கொள்ளாமல் புறக்கணித்த ஜெயலலிதா; 14.10.2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அரசாங்கமே கூட்டிய போது, அது ஒரு கண்துடைப்பு நாடகம், அந்தக் கூட்டத்தை கூட்டுவதற்கான எந்த தார்மீக உரிமையும் கருணாநிதிக்கு கிடையாது என்று கூறி அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த ஜெயலலிதா; 24.10.2008 அன்று சென்னையில் பிரமாண்டமான மனித சங்கிலி ஒன்றை அனைத்துக் கட்சி சார்பில் நடத்திய போது அதனைப் புறக்கணித்த ஜெயலலிதா; 4.12.2008 அன்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் என் தலைமையில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தபோது, அதனைப் புறக்கணித்த ஜெயலலிதா; 25.11.2008 அன்று சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற போது, அதிலே கலந்து கொள்ள மறுத்த ஜெயலலிதா; 2.12.2008 அன்று மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பிரதமரைச் சந்தித்த போது, அதனைப் புறக்கணித்த ஜெயலலிதா; இலங்கைப் பிரச்சினை மீண்டும் உருவெடுத்த 6 மாதங்களுக்குப் பிறகு நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம், ஜெயலலிதாவே இருக்கப்போகிறார் என்றெல்லாம் அறிவித்திருப்பது உண்மையில் வரவேற்கத்தக்கது தானே?

அதனால்தான் 7.2.2009 அன்று நான் எழுதிய ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே என்ற தலைப்பிட்ட உடன்பிறப்பு மடலில்

தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே ஆம்; நமக்குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிராமல் – விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை – இது, பாசம் – உறவு – உணர்வு -இவற்றோடு ஒன்றிக் கலந்தது எனும் உண்மை உணர்ந்து; கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு ஒரே குரலில் ஒலித்து; இரண்டு பிரிவுகளாய் இருப்பினும் கத்தரிக்கோல் போல இருந்து காரியமாற்றிடக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைய பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க. வின் சார்பில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சராக இருந்தபோது-கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய கொள்கையை – அவர் ஏற்ற நடைமுறையை-இன்றைக்கும் அக்கட்சியின் உடன்பிறப்புகள், ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும் எனக்கேட்டு; அவ்வாறே எதிர்பார்த்து – இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும்; இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அழைக்கிறேன்.

எல்லோரும் ஒன்று பட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் உறுதி! உறுதி!! உறுதி!!! என்று எழுதினேன்.

இலங்கைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் – அரசியல் கருத்து மாறுபாடுகள் எவ்வளவுதான் இருந்தாலும், இதிலே நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம் என்று நானே முன் வந்து எழுதினேன்.

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது – இலங்கை அரசுடன் பேசுமாறு இந்திய அரசைக் கேட்டுக் கொள்வோம் என்று மட்டும்தான் பதில் அளித் தார்கள். இப்போது அதே ஜெயலலிதா 15.10.2008 அன்று விடுத்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்பதை, ஐந்து முறை முதல்-அமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது.

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று குறிப்பிட்டவர் – தற்போது உண்ணாவிரதம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அறிக்கையில் தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இந்த இனப்படு கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தவர் என்பதையும் மறந்து விடாமல் – அவர்தான் தற்போது உண்ணாவிரதமிருக்க முன் வந்துள்ளார் என்பதையும் மனதிலே கொண்டு அதனை நாமும் தயக்கமின்றி வரவேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.