மட்டக்களப்பில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விவகாரம்: சந்தேக நபரை சிறுமி அடையாளம் காட்டினார்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள விவேகானந்தபுரம் கிராமத்தில் 14 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான அடையாள அணிவகுப்பு இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிறுமியும் அவரது தாயாரும் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினர்.

இது குறித்து தெரியவருவதாவது:-

கடந்த சனிக்கிழமை பகல் வீட்டில் தாயாருடன் இருந்த வேளை, சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் தாயாரை சமையல் அறையில் கட்டி வைத்து விட்டு சிறுமியைத் துப்பாக்கியைக் காட்டி பயமுறுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய டி.என்.சனத் நிசங்க என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில், இன்றைய அடையாள அணி வகுப்பு நிமித்தம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

மட்டக்களப்பு பதில் நீதிபதி எம்.ஐ.எம். நூர்டீன் முன்னிலையில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் பொலிஸாரும், பொது மக்களும் என 7 பேர் சாதாரண உடையில் நிறுத்தப்பட்டிருந்தனர். சாட்சிகளான சிறுமியும் அவரது தாயாரும் முதலாவது சுற்றிலேயே சந்தேக நபரை அடையாளம் காட்டினர்.

3ஆவது சாட்சியான கிராமவாசி ஒருவர் சந்தேக நபரை அடையாளம் காட்டத் தவறி விட்டார். சந்தேக நபர் மீண்டும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் வீ. இராமகமலன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேவேளை நீதிமன்றத்திலிருந்து மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர் மதிய உணவு வேளையின் போது குழப்பம் விளைவித்துக் கிணற்றுக்குள் குதிக்க முற்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.