வக்கீல்களின் கலகமே மோதலுக்கு காரணம்-ஸ்ரீகிருஷ்ணா

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலகத்தி்ல் ஈடுபட்டதே, உயர்நீதிமன்ற மோதலுக்குக் காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் வன்முறை மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். பல நூறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அவரிடம் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதேபோல காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.

வக்கீல்களே பிரச்சினைக்குக் காரணம்…

இந்த அறிக்கையில் வக்கீல்களே பிரச்சினைக்குக் காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் அறிக்கை விவரத்தை இன்று இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

நீதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ..

போலீசாருடன் மோதல் ஏற்பட்ட போது வக்கீல்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடந்து கொண்டனர். வக்கீல்களின் நடவடிக்கை குற்றம் செய்பவர்களின் நடவடிக்கை போல மோசமாக இருந்தது.

வக்கீல்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் போல தங்களை நினைத்துக் கொண்டனர். அவர்கள் மீதான எளிமையான அணுகுமுறைதான் வக்கீல்களை இப்படி நடக்கச் செய்து விட்டது.

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் மெத்தனமாக நடந்து கொண்டார். இது தான் கலவரத்துக்கு காரணமாகி விட்டது.

எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் வக்கீல்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதற்காக தனது அதிகபட்ச அரசியல் சாசன அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும்.

மேலும் தேவைப்பட்டால் வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும் கூட வரவேற்கத்தகுந்ததே. இதன் மூலம் வக்கீல்களின் நடத்தை விதிமுறைகளை மாற்றியும், இறுக்கமாக்கியும், அதன் புனிதத்தை காக்க முடியும்.

காரணம், இதுபோன்ற சம்பவத்தால் வக்கீல்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை நம்பி வருவோருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. நீதித்துறைக்கும், சட்டத்திற்கும் கூட இதனால் பெரும் ஆபத்து ஏற்பட்டு விடுவதால் இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை.

இதுபோன்ற சட்ட திருத்தங்களை மேற்கொள்ளும் வரை, வக்கீல்ளும், நீதிமன்றங்களும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உச்சநீதிமன்றமே வகுக்க வேண்டும் என்று நீதிபதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் மீதே அனைத்துத் தரப்பினரும் பொதுவான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில் வக்கீல்கள்தான் பிரச்சினை பெரிதாக காரணம் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.