வன்னியில் சிறுவர் உட்பட பொதுமக்களின் உயிரிழப்பு அதிகம் : பான் கி-மூன் கவலை

வன்னியின் போர்ப் பிரதேசத்தில் சிறுவர்கள் உட்பட கொல்லப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கி-மூன் ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் கொல்லப்படுதல் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்கு இலங்கையில் நடைபெறும் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ள போதிலும், எந்த வகையில் அது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெளிவுபடுத்தவில்லை.

அத்துடன், பொதுமக்கள் பாதிக்கப்படாது இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அந்த மக்களிற்கான அடிப்படைத் தேவைகள் சென்றடைய வழி செய்ய வேண்டும் எனவும், சிறீலங்கா அரசிடம், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தான் மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் பான் கி-மூன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர சிறீலங்கா அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவசர அழைப்பு விடுத்துள்ள அவர், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கழைய வேண்டும் எனவும் கேட்டிருக்கின்றார்.

Source & Thanks : pathivu.com

Leave a Reply

Your email address will not be published.