கைதாகும் தமிழ் இளைஞர்கள் இரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை: ஜெயானந்தமூர்த்தி

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்களில் பலர் இரகசிய முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்புக்கு வந்து சிறிய விடுதிகளிலும் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளிலும் தங்கியிருந்த தமிழ் இளைஞர்களே கூடுதலாக கைது செய்யப்படுவதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கைது செய்யப்படும் இளைஞர்களில் பலர் மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் அவர்களை மனித உரிமை சட்டத்தரணிகள் கூட பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை எனவும் உறவினர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகங்களில் முறையிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்கு அனுமதி பெற்றுத்தருமாறு உறவினர்கள் மாவட்ட அலுவலகங்கள் மூலமாக கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலைமை அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.