இலங்கைக்கு மருத்துவகுழு : இந்திய அரசு அனுப்புகிறது

புதுடில்லி: அடுத்த வாரம் இலங்கைக்கு மருத்துவக் குழுவை இந்தியா அனுப்புகிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் ஏகோபித்த முடிவை அடுத்து தற்போது நேரடியாக உதவ அரசு முடிவு செய்திருக்கிறது. இலங்கையின் வடகிழக்கு பகுதியில் அமைந்த புல்மோட்டையில், மருத்துவ நிலையம் மற்றும் மருத்துவ உதவி வசதிகளை இந்தியா ஏற்படுத்துகிறது. புல்மோட்டை என்ற ஊர் தற்போது ராணுவம் வசம் இருக்கிறது.அங்கு புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் மோதலில் காயம் படும் அப்பாவித் தமிழர்களுக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இது குறித்து கடந்த 24ம் தேதி விரிவான அறிக்கை தயார் செய்து, அதை ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அத்துடன் இலங்கை அரசுடன் இந்தவிஷயம் குறித்து பேசி முடிவு எடுக்கப்பட்டதாகவும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டப்படி, புல்மோட்டையில் ஆபரேஷன் வசதிகளுடன் உரிய கட்டடம் தருவது இலங்கையின் பொறுப்பாகும். அதில் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள், மற்றும் உதவியாளர்கள் மருந்துகளுடன் அடுத்த வாரம் ஐ.எல்-76 சரக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்கள் ராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், போர்க்காயம் குறித்த சிகிச்சையில் மிகுந்த அனுபவம் மிக்கவர்கள் ஆவர். மேலும் இலங்கையில் கடந்த 1987ல் ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு பின் இந்திய அரசு நேரடியாக உதவ தற்போது முன் வந்திருக்கிறது.

செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி : இதனிடையே புலிகளுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என, இலங்கை பிரதமர் ரத்னசிரி விக்ரமனாயகே தெரிவித்துள்ளார்.மேலும் அவர்,”எப்போதெல்லாம் புலிகள் பின்னடைவை சந்திக்கிறார்களோ அப்போ தெல்லாம் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார்கள். ஆனால், இது போன்ற தவறான கணிப்புகளால் எங்களை புலிகள் ஏமாற்ற முடியாது’ என்றிருக்கிறார். இதனிடையே, புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை ஒட்டு மொத்தமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல புலிகள் முன்வரவேண்டும் என்கிற செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டி விடுத்த அழைப்பை புலிகள் நிராகரித்துள்ளனர். இதனிடையே, சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர் வடிவேல் விஜயகுமார் என்பவர், நிவாரணப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, குண்டு வெடிப்பில் சிக்கி பலியானார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.