கருணாநிதியின் புகார்கள் – தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பினார் நரேஷ் குப்தா

சென்னை: முதல்வர் கருணாநிதி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை முதல்வர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையாக சாடியிருந்தார்.

வன்னியர் சொத்து நல வாரியம் குறித்து செய்தியை பத்திரிக்கைகள் போடக் கூடாது என்று கூறி தடுக்க முயன்றார் … தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை நரேஷ் குப்தா மறந்து விடக் கூடாது.. தமிழக அரசின் சம்பளத்தைத்தான் அவர் பெறுகிறார் … மரியாதை நிமித்தமாக கூட என்னை வந்து அவர் சந்திக்கவில்லை என்று மிகக் காட்டமாக கூறியிருந்தார்.

இதற்கு நரேஷ்குப்தா பதிலளிக்கையில், வன்னியர் பொதுச் சொத்து நலவாரியத்தை மீண்டும் அமைத்து உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பை பத்திரிகைகளில் செய்தியாக வெளியிட வேண்டாம் என நான் யாரிடமும் சொல்லவில்லை. யாருக்கும் போன் செய்யவும் இல்லை.

எனக்கே, பத்திரிகைகள், டி.வி.களை பார்த்துத்தான் தெரியவந்தது.

தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்ற விதி உள்ளது. எனக்கும் யாரையும் போய் சந்தித்துப் பழக்கம் இல்லை.

கடந்த ஆட்சியின் போதும், தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை நான் சந்திக்கவில்லை.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியே நான் இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளேன். எனது ஊதியத்தில் 50 சதவீதத்தை தமிழக அரசிடமிருந்தும், 50 சதவீதத்தை மத்திய அரசிடமிருந்தும் பெற்று வருகிறேன்.

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய தேர்தல் கமிஷனுக்கு விரிவான அறிக்கை அனுப்புவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று கருணாநிதியின் புகார் குறித்த விளக்க அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார் நரேஷ் குப்தா.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.