சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளித்தார் ஸ்ரீகிருஷ்ணா

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வன்முறை குறித்து விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் அளித்தார்.

பிப்ரவரி 19ம் தேதியன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் வன்முறை மூண்டது. வக்கீல்களும், போலீஸாரும் சரமாரியாக மோதிக் கொண்டனர். பல நூறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல் நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷனை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சென்னை வந்து 2 நாட்கள் விசாரணை நடத்தினார். அவரிடம் வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள், மூத்த வக்கீல்கள் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அதேபோல காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

உயர்நீதிமன்ற வளாகத்தையும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அவருடைய இல்லத்தில் சந்தித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையின் முடிவுகள் தெரியும் வரை போராட்டத்தைத் தொடருவது என ஏற்கனவே வக்கீல்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று அந்த அறிக்கை அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் விசாரிக்கவுள்ளதால், இன்றைக்குள் தங்களது போராட்டத்தை வக்கீல்கள் வாபஸ் பெறக் கூடும் எனத் தெரிகிறது. திங்கள்கிழமை முதல் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும் வாய்ப்பும் உள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.