7 சீட்டுக்கு அதிமுக தயார் – கூட்டணியில் இணைய பாமக முடிவு?

சென்னை: லோக்சபா தேர்தலில் 6 இடங்களும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தர அதிமுக முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் இணைய பாமக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதனால் திமுக தரப்பு திகிலில் ஆழ்ந்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான வெற்றி வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சிகள் பிசியாக உள்ளன. தமிழகத்திலும் இந்தப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திமுக, அதிமுக அணிகள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. பாமக, தேமுதிக, பாஜக ஆகியவற்றின் நிலைதான் கேள்விக்குறியாக உள்ளது.

தேமுதிகவை சேர்த்துக் கொள்ள திமுக தரப்பு தயாராக உள்ளது. அதேசமயம், பாமகவை இழுக்க அதிமுக தீவிரமாக உள்ளது. பாஜகவை யாரும் சீண்டவில்லை.

இந்த நிலையில், பாமக, அதிமுக பக்கம் போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் லோச்சபா தேர்தலை திமுகவுடன் இணைந்து சந்தித்தது பாமக. ஆனால் காலப் போக்கில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் உராய்வுகள் ஏற்பட்டு விட்டன.

இடையில் இந்த விரிசலுக்கு ஒட்டுப் போட்டாலும் கூட அது முழுமையான அளவில் விரிசலைத் தீர்த்து வைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது அதிமுக அணி பக்கம் பாமக சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

6 லோக்சபா – 1 ராஜ்யசபா சீட்

பாமகவுக்கு 6 லோக்சபா சீட்களையும், ஒரு ராஜ்யசபா சீட்டையும் தருவதாக அதிமுக உறுதியளித்துள்ளதாம். இதை பாமக தரப்பு ஏற்றுக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் ஜெயலலிதாவை பார்க்க வரப் போவதாக தகவல் பரவியது. இதையடுத்து அத்தனை செய்தியாளர்களும் போயஸ் தோட்டத்தில் குவிந்தனர். ஆனால் தலைவர்கள் யாரும் வரவில்லை.

இருப்பினும் கூட்டணி முடிவாகி விட்டதாகவே பேச்சு நிலவுகிறது.

வருகிற 7ம் தேதி பல்லாவரத்தில் பாட்டாளி இளைஞர் சங்க மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு அடுத்த நாள் பாமக பொதுக்குழு கூடவுள்ளது. அப்போது, அதிமுக கூட்டணி குறித்து இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து வருகிற 10ம் தேதி ஜெயலலிதா மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் டாக்டர் ராமதாஸும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இன்று மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது கூட்டணி தொடர்பாக முக்கிய தகவலை அவர் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.

திருமாவளவனும் வருவாரா?

கடந்த திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிள் தற்போது அதிமுக அணியில் உள்ளன. தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே பெரிய கட்சியாகும். காங்கிரஸ் தவிர திருமாவளவன் மட்டுமே அங்கு எஞ்சியிருக்கிறார்.

அதிமுகவுக்கு போக பாமக முடிவு செய்து விட்டதாக கூறப்படும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அக்கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என திமுகவை காங்கிரஸ் நெருக்கி வருகிறது. ஆனால் திருமாவளவனை வைத்துக் கொள்ளவே திமுக விரும்புகிறது.

இந்த நிலையில், பாமக அதிமுக பக்கம் போய் விட்டால் திருமாவளவனின் முக்கியத்துவம் திமுகவில் அதிகரித்து விடும். அதேசமயம், பாமகவைப் பின்பற்றி திருமாவளவனும் அதிமுக பக்கம் போவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது.

பாமக அதிமுகவுக்குப் போகுமா, அதை திருமாவளவன் பின்பற்றுவாரா, தமிழகத்தின் புதிய அரசியல் கூட்டணிகள் என்ன என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

திக் திக்கில் திமுக

ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக, அதிமுக இடையே சம பலம் நிலவுவதாகவும், திமுக அணியிலிருந்து ஏதாவது ஒரு கட்சி வந்தால் கூட அது அதிமுகவுக்கு சாதகமாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பலம் வாய்ந்த பாமக அதிமுக அணிக்குத் தாவினால் அது திமுக அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

எப்படியாவது சமாதானப்படுத்தி பாமகவை தங்கள் பக்கம் இழுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்து வரும் திமுகவுக்கு, பாமக, அதிமுகவுக்குப் போகலாம் என்று வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியானதாகவே இருக்கும்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.