லாகூர் தாக்குதல்-பாக். அம்பயர் கவலைக்கிடம்

லாகூர்: லாகூர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் நுரையீரல் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அம்பயர் அக்சன் ரசாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ம் தேதி லாகூரில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சென்ற இலங்கை அணி வீரர்கள் மற்றும் அம்பயர்கள் வந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 போலீசார் மரணமடைந்தனர். இலங்கை வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக துபாய் வழியாக தாய்நாடு திரும்பினர்.

இத்தாக்குலில் பாகிஸ்தான் அம்பயர் அக்சன் ரசா என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர் லாகூர் சர்வீசஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி குண்டு அவரது நுரையீரல் மற்றும் கல்லீரல் பகுதிகளில் அதிகம் சேதம் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என டெய்லி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று போலீசார் வீடு திரும்பியுள்ளனர். ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் டெஸ்ட் அம்பயர் அக்சன் ரசாவின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது என்றார் அவர்.

பாகிஸ்தானின் முதல் தர கிரிக்கெட் வீரரான அக்சன் ரசா , கடந்த 2006ம் ஆண்டிலிருந்து முதல் தரப் போட்டிகளில் அம்பயராக பணியாற்றி வருகிறார். தற்போது 34 வயதான இவர் லாகூர் டெஸ்ட் போட்டியில் நான்காவது அம்பயராக பணியாற்ற வந்த போது தீவிரவாதிகளால் சுடப்பட்டார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.