இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்

லண்டன்: லாகூரில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று விடுதலைப் புலிகள் அமைப்பு விளக்கியுள்ளது.

லாகூரில் இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கு விடுதலைப் புலிகளும் காரணமாக இருக்கலாம் என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா கூறியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் சார்பில் லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகள் இதைச் செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் இதை முற்றிலும் நிராகரித்துள்ளனர் விடுதலைப் புலிகள். இதுகுறித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் திலீபன் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், லாகூர் சம்பவத்திற்கு நாங்கள் காரணமல்ல. அங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும், எங்களுக்கும் இடையே எந்தவித தொடர்பும் கிடையாது.

விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது தவறாகும்.

இலங்கை அரசு முற்றுகையிட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை வெளியேற்ற வேண்டும் எனும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது. அதை நிராகரிக்கிறோம்.

அதேபோல ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடையவும் மாட்டோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், எங்களோடுதான் இருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளும் கூட எங்களுடன்தான் இருக்கின்றனர் என்றார் திலீபன்.

இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த தி டைம்ஸ் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் விடுதலைப் புலிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்றும் அல் கொய்தாவும்,அதன் துணை அமைப்புகளும்தான் இதை நடத்தியிருக்க முடியும் எனவும் அது தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அணி ஒன்றை இதுபோல தாக்குவதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும், இந்திய அரசுக்கும், பிற கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கும் பலத்த எச்சரிக்கையை ஏற்படுத்துவதே இந்த தாக்குதலின் நோக்கமாகும் என்றும் அது தெரிவித்துள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.